கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை 31-ந் தேதி வரை பஸ்கள் ஓடாது - தடையை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பஸ் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை வருகிற 31-ந் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால் அன்று வரை பஸ்கள் ஓடாது.

Update: 2020-07-14 00:00 GMT
சென்னை, 

கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

முழுஊரடங்கு நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து, தமிழகத்தில் அன்று முதல் அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அப்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் நீங்கலாக மற்ற மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளுடன் அரசு பஸ் போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கிடையே, அந்த மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்தது. இதற்கு பொது போக்குவரத்தும் ஒரு காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் குழு கூறியதால், பஸ் போக்குவரத்துக்கு 15-ந் தேதி (நாளை) வரை தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ-பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. குடும்பத்தினரின் திருமணம், மருத்துவ சிகிச்சை, இறுதிச்சடங்கு போன்ற அத்தியாவசிய காரணங்களுக்கு செல்பவர்களுக்கு மட்டும் இ-பாஸ் வழங்கப்படுகிறது.

மேலும் தொழிற்சாலைகளில் பணியாற்றுவோர் அந்தந்த நிறுவனங்கள் மூலம் இயக்கப்படும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வர அனுமதிக்கப்பட்டு உள்ளது. அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோர், அலுவலகங்களுக்கு சென்று வருவதற்காக சில அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், பஸ் போக்குவரத்துக்கு நாளையுடன் முடிவடைவதாக இருந்த தடையை, வருகிற 31-ந் தேதி வரை மேலும் 16 நாட்கள் நீட்டித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்காக, பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் 31-ந் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா நோய்த் தொற்றை தடுக்க தமிழக அரசு, தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், மாநிலத்தில் தனியார் மற்றும் அரசு பொது பஸ் போக்குவரத்து சேவை கடந்த 1-ந் தேதி முதல் 15-ந் தேதிவரை நிறுத்தப்பட்டது.

தற்போது, தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றை தொடர்ந்து கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் 31-ந் தேதி முடிய தனியார் மற்றும் அரசு பொது பஸ் போக்குவரத்து சேவை இயக்கப்படாது.

தமிழ்நாடு அரசின் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்