அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பம் - ஓரிரு நாட்களில் இணையதளம் அறிமுகம்
கொரோனா தொற்று காரணமாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு உயர்கல்வி துறை சார்பில் இன்னும் ஓரிரு நாட்களில் இணையதளம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சென்னை,
கொரோனா நோய்த்தொற்று காரணமாக கல்வி நிறுவனங்களின் பணிகள் அனைத்தும் முடங்கிப்போய் இருக்கின்றன. 2020-21-ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும்? அதற்கான ஆயத்த பணிகளை எப்போது செய்வது? என்பது போன்ற பல்வேறு யோசனைகளுடன் உயர்கல்வித்துறை இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த கல்லூரிகளில் வழங்கப்படும். அதனை மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று வாங்கி செல்வார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்ற அரசின் அறிவுறுத்தலை பின்பற்றி, விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க ஏதுவாக புதிய முறையை கையாள உள்ளது.
அதன்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான இணையதளம் இன்னும் ஓரிரு நாட்களில் உயர்கல்வித்துறை சார்பில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதன் மூலம் மாணவர்கள் கல்லூரிகளுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங் களை வாங்க தேவையில்லை. மாறாக இந்த இணையதளத்தில் சென்று அவர்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்துகொள்ளலாம். மாணவர் சேர்க்கையை பொறுத்தவரையில், ஏற்கனவே பின்பற்றப்படும் நடைமுறைதான் அமலில் இருப்பதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்த இணையதளம் அறிமுகம் செய்யப்படும் அதேநேரத்தில்தான், என்ஜினீயரிங் படிப்பு கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.