வங்கி மற்றும் தபால் நிலையங்களில் ரூ.20 லட்சத்துக்கு மேல் பணம் எடுத்தால் வரி பிடித்தம் - வருமான வரித்துறை நடவடிக்கை

கருப்பு பணத்தை ஒழிக்க வங்கி மற்றும் தபால் நிலையங்களில் ரூ.20 லட்சத்துக்கு மேல் பணம் எடுத்தால் வரி பிடித்தம் செய்யும் நடைமுறையை வருமான வரித்துறை கொண்டுவந்துள்ளது.

Update: 2020-07-12 22:15 GMT
சென்னை, 

வங்கிகளில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் டெபாசிட் செய்வதாகவோ, பணம் எடுப்பதாகவோ இருந்தால் நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் நம்பரை குறிப்பிட வேண்டும்.

அப்போது தான் வங்கி பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் செலுத்தும் பணத்தை வங்கி கணக்கில் டெபாசிட் செய்வார்கள். அதேபோன்று வாடிக்கையாளர்கள் கேட்கும் பணத்தை அவர்களது வங்கி கணக்கில் இருந்து எடுத்து கொடுப்பார்கள். கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடைமுறையில் வருமான வரித்துறை புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

இந்த புதிய நடைமுறையின்படி, வருமான வரி செலுத்தாத நபராக இருந்தால் தங்களது வங்கி கணக்கில் இருந்து ரூ.20 லட்சம் வரை மட்டுமே எந்தவித வரி பிடித்தமும் இல்லாமல் பெற முடியும். ரூ.20 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை பணம் எடுத்தால் 2 சதவீதமும், ரூ.1 கோடிக்கு மேல் பணம் எடுத்தால் 5 சதவீதமும் வரி பிடித்தம் செய்யப்படும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

அதேவேளையில் வருமான வரி செலுத்தும் வாடிக்கையாளராக இருந்தால், தங்களது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 கோடி வரை பணம் எடுத்தால் எந்தவித வரி பிடித்தமும் செய்யப்படாது. ரூ.1 கோடிக்கு மேல் பணம் எடுத்தால் 2 சதவீதம் வரி பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஜூலை 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதுகுறித்து மத்திய நேரடி வரி வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இந்த புதிய நடைமுறை மூலம் வங்கி மற்றும் தபால் நிலையங்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும்போது அவர்களது பான் நம்பர் பதிவு செய்யப்படும். அப்போது தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகைக்கு மேல் பணம் எடுத்தால் தானாகவே வரி பிடித்தம் செய்யப்படும். அதற்கான லிங்க் அனைத்து வங்கி மற்றும் தபால் நிலையங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறையின் மூலம் அதிக அளவிலான பணத்தை வங்கி கணக்கில் இருந்து எடுக்கும் வாடிக்கையாளர்கள் வருமான வரி தாக்கல் செய்யாமல் தப்பி விடுவதை கண்டுபிடிக்க முடியும். அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருமான வரி தாக்கல் செய்வதை உறுதிபடுத்தலாம். கருப்பு பணத்தை ஒழிக்க முடியும். இந்த புதிய நடைமுறையின் மூலம் இதுவரை 53 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளில் இருந்து வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்