என்ஜினீயரிங் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு 15-ந்தேதி வெளியிடப்படும்: அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

என்ஜினீயரிங் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு 15-ந்தேதி வெளியிடப்படும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-11 23:15 GMT
சென்னை, 

கொரோனா நோய்த்தொற்று காரணமாக, கல்வி நிலையங்களில் அடுத்த கல்வியாண்டுக்கான ஆயத்த பணிகள் அனைத்தும் காலதாமதமாகி வருகிறது. இந்த நிலையில் 2020-21-ம் கல்வியாண்டு தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கான காலஅட்டவணையை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) சமீபத்தில் வெளியிட்டது. அதில் என்ஜினீயரிங் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வை அக்டோபர் 5-ந்தேதிக்குள்ளும், 2-ம்கட்ட கலந்தாய்வை அக்டோபர் 15-ந்தேதிக்குள்ளும் நடத்தி முடிக்கவேண்டும் என்று தெரிவித்து இருந்தது.

அந்தவகையில் தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும்? என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்த முடிவுகளை எடுத்து அறிவிக்கும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனா நோய் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உடல்நிலை குறித்தும், என்ஜினீயரிங் கலந்தாய்வு குறித்தும் அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

என் உடல்நிலை பற்றி தவறான தகவல்கள் வெளியாகிவருகிறது. நான் நலமுடன் இருக்கிறேன். எனக்கு ரத்தஅழுத்தம், சர்க்கரை என்று எதுவும் கிடையாது. நான் தற்போது மருத்துவமனையின் வளாகத்தில் உள்ள விருந்தினர் இல்லத்தில்(கெஸ்ட் ஹவுஸ்) ஓய்வு எடுத்துவருகிறேன்.

என்ஜினீயரிங் படிப்பு ஆன்லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அனைத்து பணிகளும் தயார்நிலையில் உள்ளன. அதுகுறித்து வருகிற 15-ந்தேதி நேரடியாக வந்து அறிவிக்கஇருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்