சரக்கு வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கும் விவகாரம்; அரசுக்கு 1,724 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என தகவல்

சரக்கு வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிப்பதன் மூலம் அரசுக்கு 1,724 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Update: 2020-07-07 10:20 GMT
சென்னை,

தமிழகத்தில், சரக்கு வாகனங்களுக்கான மோட்டார் வாகன வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு கடந்த மே 14 ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணைக்கு தடை விதிக்க கோரி, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் அதன் தலைவர் முருகன் வெங்கடாச்சலம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், “ஊரடங்கு காலத்தில் சரக்கு வாகனங்கள் இயக்கப்படாததால் லாரி உரிமையாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மோட்டார் வாகன வரி செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூன் 30 வரை நீட்டித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை வரி விலக்கு வழங்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திரபாபு, ஜூன் 7-ம் தேதிக்குள் மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இன்று தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,
தமிழகத்தில் சரக்கு வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டால், தமிழக அரசுக்கு 1,724 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊரடங்கு காலத்தின் போது சரக்கு வாகனத்திற்கு தடை விதிக்காததால் வரி விலக்கு என்ற கேள்வியே எழவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்