கடைகள், ஷோரூம்கள் திறப்பு சாலைகளில் அலைமோதிய வாகனங்கள் இயல்பு நிலை திரும்பியது போன்ற உணர்வு

சென்னையில் 17 நாட்களுக்குப்பின் நேற்று பெரிய கடைகள், ஷோரூம்கள் திறக்கப்பட்டன.

Update: 2020-07-06 23:30 GMT
சென்னை,

சென்னையில் 17 நாட்களுக்குப்பின் நேற்று பெரிய கடைகள், ஷோரூம்கள் திறக்கப்பட்டன. சாலைகளில் வாகனங்கள் அலைமோதின. இதனால், இயல்பு நிலை திரும்பியது போன்ற உணர்வு ஏற்பட்டது.

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் 6 கட்டங்களாக வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முதல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூன் 19-ந் தேதிக்கு முன்னர் என்ன நிலை இருந்ததோ அதே நிலை தொடரும் என்றும் கூடுதலாக சில தளர்வுகளும் வழங்கப்பட்டன. புதிய தளர்வுகளின் படி சென்னையில் வணிக வளாகங்கள் தவித்து ஷோரூம்கள், பெரிய கடைகள் (ஜவுளி, நகை கடைகள்) திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

சென்னையில் 17 நாட்களுக்குப்பின் நேற்று மீண்டும் தளர்வுகள் அளிக்கப்பட்டதால், பிரதான சாலைகளான அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு 100 அடி சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, அண்ணா நகர் சாலைகள் என அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதுவரை வீடுகளில் முடங்கி கிடந்த சொகுசு கார்கள் மற்றும் விலை உயர்ந்த ஆடம்பர சொகுசு கார்கள், ஆட்டோக்கள், கால் டாக்சிகள் என கார்கள் சாலைகளில் சீறிப் பாய்ந்தன. பொது போக்குவரத்து வாகனங்களை தவிற பிற வாகனங்கள் சாலைகளில் வலம் வந்தன.

இவ்வாறு சாலைகளில் வாகனங்கள் அலைமோதியதை பார்க்கும்போது, சென்னை நகரமே இயல்பு நிலை திரும்பியது போன்ற உணர்வே ஏற்பட்டது. எனினும், ஒரு சில வாகனங்களை தவிர பெரும்பாலான வாகனங்கள் அரசு விதித்துள்ள நடைமுறைகளை ஒழுங்காக கடைபிடித்தன.

அதாவது, ஆட்டோக்களில் டிரைவர் தவிர்த்து 2 பேரும், டாக்சிகளில் டிரைவர் தவிர்த்து 3 பேரும் மட்டுமே பயணம் செய்தனர். வாகனங்களில் சென்ற அனைவருமே முகக்கவசம் அணிந்து கொண்டு தான் பயணித்தனர்.

இதன் மூலம் மக்களிடையே கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதையும், கொரோனா வைரசுடன் மக்கள் வாழப் பழகிக்கொண்டனர் என்று எண்ணத் தோன்றுகிறது.

கடைகள் திறக்க நேற்று அனுமதி அளிக்கப்பட்டதன்படி, சென்னையின் பிரதான வர்த்தக தலமான தியாகராய நகர், புரசைவாக்கம், மைலாப்பூர், வண்ணாரப் பேட்டை உள்ளிட்ட இடங்களில் பெரிய ஜவுளிக்கடை, நகைக்கடைகள் உள்ளிட்ட அரசு அனுமதி அளித்துள்ள கடைகள் அனைத்தும் திறந்து இருந்ததை பார்க்க முடிந்தது. இந்த இடங்களில் மக்கள் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டாலும், மக்கள் கையில் பணம் இல்லாததால் தங்கள் அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை அள்ளி வாங்காமல், கிள்ளியே வாங்கிச் சென்றனர்.

அதாவது, தியாகராய நகரின் ரங்கநாதன் தெருவில் மக்கள் துணி பைகளை அள்ளிக் கொண்டு தோள்களில் சுமந்து செல்வது வழக்கம். ஆனால், நேற்று அந்த அளவில் யாரும் துணி பைகளை தோள் மீது சுமந்ததாக தெரியவில்லை.

சென்னை அண்ணாசாலை ரிச்சி தெருவில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. ரிச்சி தெருவுக்குள் இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படாததால் தெருக்கள் அகலமாக இருந்தன. இதனால், ரிச்சி தெருவில் செல்போன், கம்பியூட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்க வந்த மக்கள் அதிக நெருக்கடி இன்றி தெருக்களில் நடந்து செல்வதை பார்க்க முடிந்தது. இதே போன்று பர்மா பஜாரிலும் எலக்ட்ரானிக்ஸ் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன.

டீ கடைகள் திறந்து இருந்தன. ஓட்டல்களும் திறக்கப்பட்டு இருந்தன. ஓட்டல்களில்பார்சல் மட்டுமே வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்