கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 15 மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.;

Update: 2020-07-06 21:46 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்தப் பணியில் மாவட்ட நிர்வாகத்தை தமிழக அரசு முடுக்கி உள்ளது. கொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கு ஏற்கனவே தலைமை செயலாளர் கே.சண்முகம் பல்வேறு அறிவுறுத்தல்களுடன் கடிதங்கள் எழுதியுள்ளார். அந்தப் பணிகளை கண்காணிப்பதற்காக குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் தலைமை செயலாளர் கே.சண்முகம் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, 15 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி மூலம் நேற்று மாலை ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி, நெல்லை, தூத்துக்குடி, வேலூர், ராணிப்பேட்டை, ராமநாதபுரம், சேலம், திருவண்ணாமலை, திண்டுக்கல், கன்னியாகுமரி, விழுப்புரம், விருதுநகர், சிவகங்கை, தேனி, திருச்சி ஆகிய மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றனர்.

சென்னையை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த மாவட்டங்களில் உள்ள பாதிப்புகளின் நிலவரம் குறித்து தலைமைச் செயலாளர் கேட்டறிந்தார். நோய்த்தொற்றை குறைப்பது, மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவமனை படுக்கை வசதிகளை அதிகரிப்பது, தேவையான கட்டுப்பாடுகளை பிறப்பிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மீதம் உள்ள மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் கே.சண்முகம் விரைவில் ஆலோசனை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்