பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர்மன்னன் மரணம் தலைவர்கள் இரங்கல்

பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர்மன்னன் நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Update: 2020-07-06 20:30 GMT
புதுச்சேரி,

புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மகனும், முதுபெரும் தமிழறிஞருமான மன்னர்மன்னன் என்கிற கோபதி (வயது 92). சுதந்திரப் போராட்ட தியாகி. மொழிப்போர் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்.

புதுச்சேரி கதிர்காமம் காந்தி நகரில் வசித்து வந்த மன்னர்மன்னன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மரணம் அடைந்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணியளவில் இறுதி சடங்கு நடைபெறுகிறது. புதுச்சேரி வானொலி நிலையத்தில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பாரதிதாசனின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் எழுதி வெளியிட்டார். தமிழக அரசின் திரு.வி.க விருது, கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை மன்னர்மன்னன் பெற்றுள்ளார்.

மன்னர்மன்னனின் மனைவி 30 ஆண்டுகளுக்கு முன்பே காலமாகி விட்டார். இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

மன்னர்மன்னன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்:- ‘புரட்சிக்கவிஞர்’ பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர்மன்னன் மறைவிற்கு தி.மு.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் மிக நெருக்கமான நட்பு பாராட்டியவர். அவரது மறைவு நாட்டிற்கும், இலக்கியம் மற்றும் தமிழ்கூறும் நல்லுலகிற்கும் தாங்க முடியாத ஈடு கட்ட முடியாத பேரிழப்பாகும்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:- கோபதி என்ற இயற்பெயரை கொண்ட அவர், தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக தமது பெயரை மன்னர் மன்னன் என்று மாற்றிக்கொண்டார். தந்தை வழியில் இளம்வயதிலேயே இலக்கியப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். மன்னர்மன்னன் மறைவினால் தமிழ்த்தாய் அவரது மகன்களில் ஒருவரை இழந்திருக்கிறார்.

வைரமுத்து இரங்கல்

கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பதிவில், “பாவேந்தர் பாரதிதாசனின் மைந்தர் மன்னர் மன்னன் புதுச்சேரியில் மறைந்தார் என்ற செய்தி என் செவியில் இடியை இறக்குகிறது. தமிழுக்குத் தக்க துணையான பக்க பலம் போய்விட்டதே. அத்துணை தமிழ் உறவுகளுக்கும் ஆறுதல் சொல்லி ஆறுதல் கேட்கிறேன்“ என்று கூறியுள்ளார்.

கவிஞர் பொன்னடியார்:- தந்தையாரின் வழியிலேயே இலக்கிய கொள்கைகளின் வழியில் வாழ்ந்து இளைஞர்களுக்கு வழிகாட்டி உழைத்திருந்த மன்னர்மன்னனின் மறைவு தமிழ் சமூகத்துக்கு பேரிழப்பு ஆகும்.

இதேபோல தொல்.திருமா வளவன், சீமான், முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாரதிதாசன் மகன் மரணம் எடப்பாடி பழனிசாமி இரங்கல்


தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் மகனும், முதுபெரும் தமிழறிஞருமான மன்னர்மன்னன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன். மன்னர்மன்னன் தமிழக அரசின் திரு.வி.க. விருது, கலைமாமணி விருது, புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். இவர் இந்திய விடுதலைப் போராட்டத்திலும், மொழிப்போர் போராட்டத்திலும் ஈடுபட்ட தியாகியாவார்.

மன்னர்மன்னன், காமராஜர், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியவர்களுடன் நெருங்கிப் பழகி, அவர்களின் அன்பைப் பெற்றவர் ஆவார். 50-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி சிறந்த எழுத்தாளராகவும், சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தவர்.

மன்னர்மன்னனை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழறிஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்