9-ம் வகுப்பு மாணவி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு
திருச்சி அருகே 9-ம் வகுப்பு மாணவி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து அம்மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி,
திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள அரியாவூர் அதவத்தூர் பாளையத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் நெய்தலூர் காலனியில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது 2 ஆவது மகள் லட்சுமி (14)(பெயர் மாற்றப்பட்டுள்ளது) அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று (திங்கள்கிழமை) மதியம் சக தோழிகளுடன் விளையாடினார். அதனை தொடர்ந்து இவர் மதியம் 1 மணி வரை வீட்டிலிருந்துள்ளார். பிறகு வீட்டைக் கூட்டிவிட்டு அதிலிருந்த குப்பையைக் கொட்டுவதற்காக வீட்டைவிட்டு வெளியே சென்றார்.
நீண்ட நேரமாகியும் லட்சுமி வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது அவரை பெற்றோர் தேடியுள்ளனர்.
அப்போது அங்குள்ள அடர்ந்த கருவேலமுள் பகுதியில் பாதி உடல் எரிந்த நிலையில் இறந்துகிடந்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதற்கிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோமரசம்பேட்டை போலீஸார் சிறுமி உடலை கைப்பற்றி விசாரணையை துரிதப்படுத்தினர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொலையாளிகளை பிடிக்க முயன்றனர்.
இதைத் தொடர்ந்து திருச்சி சரக டி.ஜ.ஜி. ஆனி விஜயா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக், காவல் துணை கண்காணிப்பாளர் கோகிலா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி அதவத்தூர் பாளையம் அருகே 9-ம் வகுப்பு மாணவி தீ வைத்து எரிக்கப்பட்ட வழக்கில் கொலையாளிகளை பிடிக்க டிஸ்பி கோகிலா தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
போலீஸ் தரப்பில் கூறுகையில், சிறுமி வீட்டை விட்டு இவ்வளவு தூரம் வர என்ன காரணம் என்ன? யாரோ ஒருவரோடு வந்திருக்கிறார். அவர்களது உறவினர்கள் மீது ஒருசில சந்தேகங்கள் இருக்கிறது. மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர். குற்றவாளிகளைக் கைது செய்ய கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே அண்மையில் புதுக்கோட்டை, ஏம்பல் கிராமத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு, குளத்தில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. திருச்சியில் ஒன்பதாம் வகுப்பு சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.