11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஐந்து பாடங்கள் முறை திடீர் ரத்து; பழையபடி நடைமுறையே தொடரும் -தமிழக அரசு
11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்கள் பழைய நடைமுறையின்படியே பாடத்திட்டங்களை தேர்வு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
சென்னை
பள்ளி கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பு ஏற்றது முதல் கல்வித்துறையில் பல அதிரடியான மாற்றங்களை புகுத்தி வருகிறார். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளை போன்று 11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுத்தேர்வு முறையில் மீண்டும் மாற்றங்களை கொண்டு வருவதற்கு பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது.
11-ம் வகுப்பு, 12-ம் வகுப்புகளில் மொழி பாடங்களாக தமிழ், ஆங்கிலம் என்று 2 பாடங்களும், 4 முக்கிய பாடங்களும் என மொத்தமாக 6 பாடங்களில் தலா 100 மதிப்பெண்கள் வீதம் 600 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 2 மொழி பாடங்களுக்கு பதிலாக ஏதாவது ஒரு பாடத்தை அமல்படுத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆங்கிலம் அல்லது தமிழ் ஆகியவற்றில் ஏதாவது ஒரு மொழி பாடத்தை மாணவர்கள் தேர்வு செய்யலாம் என்று ஆலோசிக்கப்பட்டது.
மேலும் மொழிப்பாடம் ஒன்று குறையும் பட்சத்தில் தேர்வுகளின் எண்ணிக்கை 5 ஆக குறையும். இவ்வாறு குறையும்போது 600 ஆக இருந்த மொத்த மதிப்பெண்கள் 500 ஆக குறையும். இந்த முடிவுகளை நன்கு பரிசீலித்த பள்ளி கல்வித்துறை இதற்கான பரிந்துரையை, தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியது.
ச்
தமிழக அரசு இந்த கல்வி ஆண்டு முதலே புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது என அறிவித்தது.
ஆனால் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஐந்து பாடங்கள் முறை திட்டம் திடீர் என கைவிடப்பட்டது. பழையபடி ஆறு பாடங்கள் என்ற நடைமுறையே தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்கள், பெற்றோர், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கபட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.
மாணவர்களின் நலன் கருதி புதிய பாடத்திட்ட முறை ரத்து செய்யப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.