நொச்சி, நிலவேம்பு, வெற்றிலை, தூதுவளை ஊரடங்கால் செடி, கொடி வளர்ப்பில் ஆர்வம்

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 6-ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது.

Update: 2020-07-05 22:15 GMT

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 6-ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. கொரோனாவுக்கு பயந்து இயல்பு வாழ்க்கையை தொலைத்து மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருப்பதை பார்க்க முடிகிறது. என்னதான் டி.வி. பார்த்து பொழுதை போக்கினாலும், அதிலும் ஒருவித சலிப்பு தட்டிவிடும் என்பதை மறுக்க முடியாது.

இதனால் பொழுதை கழிப்பதற்கு சில பயனுள்ள நடவடிக்கையை பொதுமக்கள் மேற்கொள்ள தொடங்கி இருப்பதை பார்க்க முடிகிறது. வீட்டின் வளாகத்தை சுத்தப் படுத்துவது, குழந்தைகளுடன் விளையாடுவது என பயனுள்ள வகையில் பொழுதைக் கழிக்கிறார்கள். அந்த வகையில் செடி, கொடிகள் வளர்ப்பதிலும் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

பொதுவாகவே வீட்டில் வளாகத்தில் ஒரு சிறு செடி வளர்ந்தால் கூட அதை சுத்தப்படுத்துகிறோம் என்ற பெயரில் அகற்றி விடுவதே மக்களின் வழக்கம். ஆனால் தற்போது வீட்டைச் சுற்றிலும் செடிகள் வளர்க்க மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

காலியாக உள்ள இடத்திலும் மண்ணை பரப்பி அதில் செடி, கொடிகளை வளர்க்கின்றனர். அந்த வகையில் நொச்சி, நிலவேம்பு, கற்றாழை, தூதுவளை, வெற்றிலை, துளசி உள்ளிட்ட செடிகளை அதிகமாக வளர்க்க முக்கியத்துவம் தருகிறார்கள். இந்தச் செடிகள் வீட்டை அழகாக்குவதுடன், இதன் இலைகளும் உடலுக்கு எதிர்ப்பு சக்தி கொடுக்கும் திறன் கொண்டவை என்பதால் மேற்கண்ட செடிகளை பராமரித்து வளர்ப்பதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்கும் சமயங்களில் இது போன்ற பயனுள்ள நடவடிக்கையை மேற்கொள்வதால் வீடு அழகாவதுடன், சுற்றுப்புறமும் பொலிவு பெறுகிறது. மேலும் மரம் நடவேண்டும், செடி, கொடிகள் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் குழந்தைகளிடையே இப்போது இருந்தே வளர்வதற்கு இது ஒரு நல்ல காரணியாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் செய்திகள்