என்.எல்.சி. விபத்தில் 7 பேர் உயிரிழந்த விவகாரம்: மத்திய அரசு நிதியுதவி வழங்க முதலமைச்சர் கோரிக்கை
என்.எல்.சி. விபத்தில் 7 பேர் உயிரிழந்த விவகாரத்தில், மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,
நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. 2வது அனல் மின் நிலையத்தில் உள்ள பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் என்.எல்.சி தொழிலாளர்கள் 7 பேர் பலியானார்கள். 17 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து சம்பவம் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து என்.எல்.சி. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துடன், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவியும் அளிப்பதாக அறிவித்தார். மேலும், விபத்தில் படு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், குறைவாக காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்தார். அதோடு, காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில் என்.எல்.சி. விபத்தில் 7 பேர் உயிரிழந்த விவகாரத்தில், மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நேற்றைய தினம் (1.7.2020) மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் என்னை தொடர்பு கொண்டு என்.எல்.சி விபத்து பற்றி விசாரித்த போது, நான் மாநில அரசு சார்பாக செய்ய வேண்டிய உதவிகளை செய்து வருகிறோம் என்று கூறினேன். மேலும், விபத்தில் இறந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் மத்திய அரசு சார்பில் தேவையான நிதியுதவியை வழங்கிட கோரிக்கை வைத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.