பத்திரிகை சம்பந்தப்பட்ட பணிகளை தடுக்கக்கூடாது -‘வயர்லெஸ்’ மூலம் போலீஸ் கமிஷனர் அறிவுரை
பத்திரிகை சம்பந்தப்பட்ட பணிகளை தடுக்கக்கூடாது என்று போலீசாருக்கு ‘வயர்லெஸ்’ மூலம் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுரை வழங்கினார்.
சென்னை,
அத்தியாவசிய பணியில் தினசரி பத்திரிகை பணிகளும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் போலீசார் பத்திரிகை விற்பனையை கடைகளில் தடுத்தனர். வாகனங்களில் பத்திரிகைகள் கொண்டு செல்வதையும் சில இடங்களில் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபற்றி வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரிடம் கேட்டால், பத்திரிகை பணிகளை தடுக்கக்கூடாது என்று உயர் அதிகாரிகளிடம் இருந்து உரிய உத்தரவு வரவில்லை என்று தெரிவித்தனர். இது பற்றி உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘பத்திரிகை சம்பந்தப்பட்ட பணி அத்தியாவசியமானது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று கூறினார்கள்.
இந்த முரண்பாடுகளுக்கு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று வயர்லெஸ்சில் பேசும்போது விளக்கம் அளித்தார். பத்திரிகை சம்பந்தப்பட்ட பணிகளை தடுக்கக்கூடாது என்றும், பத்திரிகையாளர்கள் உரிய அடையாள அட்டையை காட்டினால் அவர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் போலீசாருக்கு அவர் அறிவுரை வழங்கினார். மேலும் மின்சார பணியாளர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
மளிகை கடைகள் பிற்பகல் 2 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மளிகை கடைகளுக்கு பொருட்களை வாகனங்களில் வாங்கிச்செல்லும் வியாபாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்வதாக வியாபாரிகள் பல இடங்களில் புகார் கூறுகிறார்கள். இதற்கும் போலீஸ் கமிஷனர் உரிய உதவி செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.