இந்தியாவில் கங்கண சூரிய கிரகணம் தெரியத் துவங்கியது
இந்தியாவில் கங்கண சூரிய கிரகணம் தெரியத் துவங்கி உள்ளது.
சென்னை,
வானில் அபூர்வ நிகழ்வாக கங்கண சூரியகிரகணம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிகழ்ந்து வருகிறது.
வானில் அரிய நிகழ்வான கங்கண சூரிய கிரகணம் இன்று காலை 10:22 மணியளவில் துவங்கியது. பிற்பகல் 3:04 மணி வரை நீடிக்கும். முழு சந்திர கிரகணம் பிற்பகல் 12: 10 மணிக்கு நிகழ்கிறது.
சந்திரன் சூரியனைவிட மிகவும் சிறியது எனினும் அது பூமிக்கு அருகே இருப்பதால் பெரியதாகத் தோன்றுகிறது. இதனால் தான் முழு சூரிய கிரகணத்தின் போது சூரியனை நிலவு முழுமையாக மறைக்கிறது. வெகு தொலைவில் நிலவு இருக்கும் போது அதன் தோற்ற அளவு சூரியனின் தோற்ற அளவைவிடச் சற்று சிறியதாக இருக்கும். அப்போது கிரகணம் நேர்ந்தால் சூரியனைச் சந்திரனால் முழுமையாக மறைக்க இயலாது. ஒரு கங்கணம்(வளையம்) போல சூரியனின் வெளிவிளிம்பு அதிகபட்ச கிரகணத்தின் போது வெளித்தெரியும் எனவே இதனை கங்கண சூரியகிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
மத்திய ஆப்ரிக்கா, காங்கோ, எத்தியோப்பியா, தெற்கு பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவில் தெரியும். ராஜஸ்தான், ஹரியானா, உத்தரகாண்ட் மாநிலங்களில் முழு சூரிய கிரகணம் தெரியும். மற்ற பகுதிகளில் பாதி சூரிய கிரகணம் தெரியும். சென்னையில் 34 சதவீதம் தெரியும்.
கிரகணத்தின் பாதை மத்திய ஆப்பிரிக்காவில் தொடங்கி, பசிபிக் பெருங்கடலில் முடிவடைவதற்கு முன்பு சவுதி அரேபியா, வட இந்தியா மற்றும் தெற்கு சீனா வழியாக பயணிக்கிறது. கிழக்கு ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தெற்கு ஆசியாவின் பெரும்பகுதி முழுவதும் ஒரு பகுதி கிரகணம் தெரியும்.
வட இந்திய நகரங்களான டெல்லி, சாமோலி, டேராடூன், ஜோஷிமத், குருசேத்திரா, சிர்சா, சூரத்கல் போன்ற இடங்களில் தெரியும். தமிழகத்தை பொருத்தவரையில் சென்னை, வேலூர், கோவை, திருச்சி, மதுரை, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியில் தெரிந்து வருகிறது.