ரூ.75.28 கோடியில் ஆக்சிஜன் குழாய் இணைப்புடன் 13,900 படுக்கை வசதி

அரசு ஆஸ்பத்திரிகளில் ரூ.75.28 கோடி மதிப்பில் ஆக்சிஜன் குழாய் இணைப்புடன் கூடிய 13 ஆயிரத்து 900 படுக்கைகளை பொதுப்பணித்துறை தீவிரமாக அமைத்து வருகிறது.

Update: 2020-06-20 20:30 GMT
சென்னை, 

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் ஆஸ்பத்திரிகளில் சுமார் 13 ஆயிரத்து 900 கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் உள்ளன. தற்போது அரசு ஆஸ்பத்திரிகளில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா அறிகுறி நோயாளிகள் வருகின்றனர். இவர்களுக்கு படுக்கையில் ஆக்சிஜன் துணை தேவைப்படுகிறது. இதனால் ஆக்சிஜன் இணைப்புகள் கொண்ட படுக்கைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.

இந்த தேவையை பூர்த்தி செய்வதற்காக, மாநிலம் முழுவதும் உள்ள 31 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமையகம் , தாலுகா ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இவற்றில் ரூ.75 கோடியே 28 லட்சம் மதிப்பில் படுக்கைகளில் ஆக்சிஜன் குழாய் இணைப்புகளை பொருத்தும் பணிகளை பொதுப்பணித்துறை ஈடுபட்டு உள்ளது.

ஆக்சிஜன் இணைப்பு

இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறையின் இணை முதன்மை தலைமை பொறியாளர் (கட்டிடம்) கே.பி.சத்தியமூார்த்தி கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 30 ஆயிரத்து நூறு படுக்கைகள் உள்ளன. இவற்றில் 13 ஆயிரத்து 900 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மீதம் உள்ள படுக்கைகளில் ஏற்கனவே இந்த வசதி உள்ளது. தற்போது ஒவ்வொரு படுக்கையிலும் ஆக்சிஜன் குழாய், அழுத்தமான காற்று வரும் குழாய், வெற்றிடமான குழாய் என மூன்று குழாய்கள் அமைக்கப்படுகிறது. இவற்றினுடைய இணைப்பு தனியாக சிலிண்டர்கள் உள்ள அறைகளில் வைக்கப்பட்டுள்ள 20 லட்சம் கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட சிலிண்டர்களில் இணைக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் சுமார் 5 ஆயிரத்து 500 படுக்கைகள் ஆக்சிஜன் குழாய் இணைப்புகளைக் கொண்டுள்ளன. ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் இதுபோன்ற வசதி ஏற்கனவே உள்ளன.

இந்தப்பணி தற்போது 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ஆஸ்பத்திரிகளில் தற்போது நூறு நோயாளிகள் சேர்ந்தால் அவர்களில் 10 பேருக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. சென்னையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிகளின் ஆக்சிஜன் திறன் அதிகரித்து வருகிறது.

10 ஆயிரம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தற்போது கையிருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்