திருச்செந்தூர்-பாலக்காடு, நாகர்கோவில்-கோவை ரெயில்கள் உள்பட 34 பயணிகள் ரெயில்கள் எக்ஸ்பிரசாக மாறுகின்றன

திருச்செந்தூர்- பாலக் காடு, நாகர்கோவில்- கோவை ரெயில்கள் உள்பட 34 பயணிகள் ரெயில்களை எக்ஸ்பிரஸ் ரெயில்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2020-06-19 20:00 GMT
சென்னை, 

இந்திய ரெயில்வே வாரியம் நாடு முழுவதும் உள்ள 17 ரெயில்வே மண்டலத்துக்கும் கடந்த 17-ந்தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், இந்தியா முழுவதும் 200 கிலோ மீட்டருக்கு மேல் இயக்கப்படும் 508 பயணிகள் ரெயில்களை எக்ஸ்பிரஸ் ரெயில்களாக இயக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் தெற்கு ரெயில்வேயில் 34 பயணிகள் ரெயில்களின், நிறுத்தங்கள் குறைக்கப்பட்டு எக்ஸ்பிரஸ் ரெயில்களாக இயக்கப்பட உள்ளதாக ரெயில்வே வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளன. அந்தவகையில் திருச்சி-ராமேசுவரம், விழுப்புரம்-திருப்பதி, புதுச்சேரி-திருப்பதி, விழுப்புரம்-மதுரை, திருச்சி-பாலக்காடு, நெல்லை-ஈரோடு, திருச்செந்தூர்-பாலக்காடு, மதுரை-புனலூர், நாகர்கோவில்-கோவை உள்பட 34 பயணிகள் ரெயில்கள் எக்ஸ்பிரஸ் ரெயில்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பயணிகள் ரெயில்களின் வேகத்தை அதிகரித்து பயண நேரத்தை குறைத்து புதிய பயண அட்டவணை தயார் செய்ய வேண்டும் என்று தெற்கு ரெயில்வே உட்பட அனைத்து ரெயில்வே கோட்டங்களுக்கும் ரெயில்வே வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே இந்த பயணிகள் ரெயில்கள் விரைவில் எக்ஸ்பிரஸ் ரெயில் அந்தஸ்தை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு எக்ஸ்பிரஸ் ரெயில்களாக மாற்றப்படும் பட்சத்தில் பயண நேரம் வெகுவாக குறையும். மேலும் பயணிகள் ரெயில் போல அடுத்தடுத்த ரெயில் நிலையங்களில் நின்று செல்வது என்பது சாத்தியமற்றது.

பயணிகள் ரெயில்களை நம்பி அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருபவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும். இதன் மூலம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படும் என்றும், அந்த வழித்தடங்களில் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் ரெயில்கள் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டி வரும் என தெற்கு ரெயில்வே வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

மேலும் செய்திகள்