மதுரையில் ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மதுரையில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2020-06-19 15:02 GMT
மதுரை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 500ஐ கடந்து உள்ளது.  நேற்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 49 பேர் உயிரிழந்து உள்ளனர். புதிதாக 2,141 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.  இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52,334 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 36 பேரும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 13 பேரும் என மொத்தம் 49 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 625 ஆக உயர்ந்து உள்ளது.

மதுரையில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 495 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  அவர்களில் இதுவரை 350 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  மதுரையில் 139 பேருக்கு மருத்துவமனையில் கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்