பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கி இருந்தால் ஊரடங்கு தளர்வுகள் தேவை இருந்திருக்காது மு.க.ஸ்டாலின் அறிக்கை

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கி இருந்தால் ஊரடங்கு தளர்வுகள் தேவை இருந்திருக்காது என்றும் மருத்துவ கட்டமைப்பை திட்டமிட்டு கொரோனாவை தடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-06-12 23:35 GMT
சென்னை,

தமிழ்நாட்டில் 5-ம் கட்ட ஊரடங்குக் காலம் முடிவடைய இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. 4-ம் கட்ட ஊரடங்கு காலத்தை விட, 5-ம் கட்ட ஊரடங்கு காலத்தில், கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது.

மே 8-ந்தேதி தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 9 பேர். ஜூன் 8-ந்தேதி இந்த எண்ணிக்கை 33 ஆயிரத்து 229 ஆக அதிகரித்திருக்கிறது. அதாவது ஒரே மாதத்தில் மட்டும், சுமார் 27 ஆயிரம் பேருக்கு கூடுதலாகத் தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு மட்டுமே ஒரே வழி என்று தமிழக அரசு சொல்லி வந்தது. ஆனால், ஊரடங்கு காலத்தில்தான், பாதிப்பு எண்ணிக்கை இத்தனை ஆயிரம் அதிகரித்துள்ளது. ஊரடங்கு என்பது முறையாக, ஒழுங்காக அமல்படுத்தப்படவில்லை.

ரூ.5 ஆயிரம் வழங்கி இருந்தால்...

ஊரடங்குச் சட்டம் அமலில் இருந்தால், அதனால் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் ஊரடங்கைத் தளர்த்தியது அரசு. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கி இருந்தால் ஊரடங்குத் தளர்வுகள் தேவையிருந்திருக்காது. ஊரடங்குத் தளர்வுகள்தான், இன்றைக்கு கொரோனா பாதிப்பில் தமிழகம், இந்தியாவில் 2-வது இடத்துக்குச் சென்றுள்ளது.

இந்தியா முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 102 பேர். தமிழகத்தில் பலியானோர் எண்ணிக்கை 349 பேர். இறந்தோர் எண்ணிக்கையில் தமிழகம் இந்திய அளவில் 5-வது இடத்தில் இருக்கிறது. இதில் சென்னையில் மட்டும் பலியானோர் எண்ணிக்கை 279 பேர். சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் 52 பேர் பலி. இது ஜம்மு-காஷ்மீர், அரியானா, பீகார் மாநிலங்களில் பலியானவர்களின் எண்ணிக்கையை விட அதிகம். தேனாம்பேட்டையில் மட்டும் பலியானவர்கள் 37 பேர். இது கேரள மாநிலத்தை விட அதிகம்.

மருத்துவ கட்டமைப்பு

தமிழகத்தில் 30 ஆயிரத்தைக் கடந்திருக்கும் தொற்று, 2 லட்சம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. சென்னையின் 5 மண்டலத்தை மற்ற பகுதிகளிலிருந்து பிரித்து, அரண் போல் அமைத்து, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி, மக்களைக் காப்பாற்றுங்கள் என்று ஏற்கனவே நான் கூறியிருந்தேன். அப்படி செய்யும்போது, அப்பகுதி மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தையும் அரசே அவர்களின் இருப்பிடம் தேடி வழங்கி உதவ வேண்டும்.

அனைத்து தேவைகளையும் வழங்கி மக்களை வீட்டுக்குள் தனிமைப்படுத்தி இருக்க வைப்பது அரசின் கடமை. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் 5 ஆயிரம் வழங்க வேண்டும். சென்னை மிகமிக மோசமான பேராபத்தைச் சந்தித்துக் கொண்டுள்ளது.

ஊரடங்கை நீட்டிப்பது மட்டுமன்றி, அடுத்தடுத்து தேவையான மருத்துவக் கட்டமைப்பை திட்டமிட்டு, கொரோனாவை தடுப்பதே அரசின் கடமை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்