ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த இடைக்கால தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு
தனியார் பள்ளிகள், மாணவ-மாணவியருக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்துவதற்கு, இடைக்கால தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுத்துவிட்டது.
சென்னை
தனியார் பள்ளிகள், மாணவ-மாணவியருக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்துவதற்கு, இடைக்கால தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுத்துவிட்டது. ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குபடுத்த என்ன விதிமுறைகளை கொண்டுவரப்பட உள்ளது என மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கொரோனா ஊரடங்கால் கல்வி நிலையங்களை திறக்க தடை நீடிக்கிறது. இதனால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்களை பல தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் நடத்தி வருகின்றன. இதற்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முயற்சிக்கும்போது, ஆபாச இணைய தள விளம்பரங்களால் கவனம் சிதைவதாக கூறப்பட்டுள்ளது.
தவறான இணைய தளங்களை மாணவர்கள் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்குமாறு மனுதாரர் கோரியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் வினீத்கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் காணொலி காட்சி முலம் விசாரணைக்கு வந்தது. ஆன்லைன் வகுப்புகளை நடத்த ஏதாவது விதிமுறைகள் உள்ளதா? ஏதாவது திட்டம் உள்ளதா? என அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.
மாநில அரசு பிரத்யேக கல்வி சேனல் வைத்துள்ளதையும், கொரோனா காரணமாக அனைத்துமே ஆன்லைன் முறைக்கு மாறி வருவதையும் தமிழக அரசு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். தற்போதைய நிலையில் இணைய வழியில் நடத்தப்படும்ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஆன்லைன் கல்வியை ஒழுங்குபடுத்த ஏதாவது நிரந்தர திட்டம் உள்ளதா? அல்லது அதனை கொண்டுவர ஏதேனும் கருத்து உள்ளதா? என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.