கொரோனா சிகிச்சைக்கு அதிக படுக்கைகள்: தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு, அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வேண்டுகோள்

கொரோனா சிகிச்சைக்கு அதிக படுக்கைகள் ஒதுக்க வேண்டும் என்று தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினருக்கு, காணொலிக் காட்சி மூலம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்தார்.

Update: 2020-06-09 22:09 GMT
சென்னை,

தமிழகத்தில் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோய் தொற்று சிகிச்சைக்கான படுக்கைகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று நடந்தது. காணொலிக் காட்சி வழியாக நடந்த இக்கூட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குனர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் மற்றும் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தின்போது, தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் தாமாகவே சேவை மனப்பான்மையுடன் முன்வந்து அதிக எண்ணிக்கையிலான படுக்கைகளை கொரோனா நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளுக்கு ஒதுக்கி இந்த பேரிடர் காலத்தில் அரசுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், ஒவ்வொரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும், தனியார் மருத்துவமனைகளும், உடனடியாக தங்கள் மருத்துவமனைகளுக்காக ஒரு பொறுப்பு அதிகாரியை (நோடல் ஆபிசர்) நியமிக்கவும், அவர் மூலமாக தமிழ்நாடு அரசு கொரோனா தடுப்புப் பணிகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள ‘ஸ்டாப் கொரோனா‘ என்ற இணையதளத்தின் வாயிலாக மருத்துவமனையில் உள்ள வசதிகள், படுக்கைகளின் எண்ணிக்கைகள், உள்நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் காலியாகவுள்ள படுக்கைகளின் எண்ணிக்கை ஆகியவற்றை அவ்வப்போது வெளிப்படைத்தன்மையுடன் பதிவேற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

அமைச்சரின் கோரிக்கையை தனியார் மருத்துவமனைகள் ஏற்றுக்கொண்டன. இதையடுத்து தங்களிடம் உள்ள அதிக எண்ணிக்கையிலான படுக்கைகளை கொரோன நோய் சிகிச்சைக்கு ஒதுக்கீடு செய்யவும், மேற்கண்ட இணையதளத்தில் அனைத்து விவரங்களையும் அவ்வப்போது பதிவேற்றம் செய்யவும் அவர்கள் ஒத்துக்கொண்டனர்.

மேலும் செய்திகள்