10ஆம் வகுப்பு மாணவர்கள் ஹால்டிக்கெட் பெற சிறப்பு பேருந்துகள் வசதி!

பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கான ஹால்டிக்கெட் பெற சென்னையில் 109 சிறப்பு பேருந்துகள் 63 வழித்தடங்களில் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Update: 2020-06-07 11:04 GMT
சென்னை,

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு, பிளஸ்-1 இறுதிநாள் தேர்வு மற்றும் பிளஸ்-2 இறுதிநாள் தேர்வு எழுதாதவர்களுக்கு மட்டும் தேர்வு வருகிற 15-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுகளில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.

இந்நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு பெற சென்னையில் 109 சிறப்பு பேருந்துகள் 63 வழித்தடங்களில் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்ட  மாணவர்கள், ஆசிரியர்கள் வசதிக்காக 63 வழித்தடத்தில் 109 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் கட்டணம் இல்லாமல் சிறப்பு பேருந்தில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பேருந்துகள் நாளை முதல் 13ஆம் தேதி வரை இயக்கப்படும் என செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அறிவுறுத்தலின் படி, ஒரு பேருந்தில் 24 பேருக்கு மட்டுமே அனுமதி என்றும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்