முக கவசம் அணியாதவர்களை அனுமதிக்க கூடாது; கடைகள், வணிக நிறுவனங்களுக்கு தமிழக அரசு உத்தரவு

முக கவசம் அணியாத வாடிக்கையாளர்களை அனுமதிக்க கூடாது என கடைகள், வணிக நிறுவனங்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Update: 2020-06-07 05:17 GMT
சென்னை,

கொரோனா பாதிப்பு எதிரொலியாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.  கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிரமுடன் செயல்பட்டு வருகிறது.  தமிழகத்தில் ஊரடங்கில் சில தளர்வுகளுடன் கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.  இதில், கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இருமல், சளி மற்றும் காய்ச்சல் போன்றவை இருப்பின் அவர்கள் 7 நாட்கள் பணிக்கு வர அனுமதிக்க கூடாது.

இதேபோன்று சமையல் அறைகளில் பணியாற்றுவோர் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.  கை கழுவும் இடங்கள், கடைகளின் பிற பகுதிகளில் எச்சில் உமிழாமல் இருக்க வேண்டும்.

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் உள்ளே நுழையும் முன் கிருமி நாசினிகள் கொண்டு அவர்களின் கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.  கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் முக கவசங்கள் மற்றும் கையுறைகளை அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.  முக கவசம் அணியாத வாடிக்கையாளர்களை அனுமதிக்க கூடாது என்றும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மேலும் செய்திகள்