3 நீதிபதிகளுக்கு கொரோனா: சென்னை ஐகோர்ட்டு மூடப்பட்டது - நீதிபதிகள் வீடுகளில் இருந்தபடி அவசர வழக்குகளை விசாரிப்பார்கள்

சென்னை ஐகோர்ட்டில் 3 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று. இதைத்தொடர்ந்து ஐகோர்ட்டு மூடப்பட்டது. நீதிபதிகள் வீடுகளில் இருந்தபடி அவசர வழக்குகளை மட்டும் விசாரிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-06-07 00:00 GMT
சென்னை,

கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அவசர வழக்குகள் மட்டும் காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

சென்னை ஐகோர்ட்டில், 2 டிவிசன் பெஞ்சுகள், ஒரு நீதிபதி கொண்ட 5 அமர்வுகள் என்று மொத்தம் 7 அமர்வுகள் அவசர வழக்குகளை மட்டும் விசாரித்து வந்தன. ஐகோர்ட்டு வளாகத்துக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேலாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை, கடந்த 1-ந் தேதி முடிவுக்கு வந்தது.

இதைத்தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டு ஊழியர்கள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வாரத்துக்கு 2 நாட்கள் என்ற வீதம் பணியாற்றினர். ஐகோர்ட்டு நீதிபதிகள் அனைவரும் ஐகோர்ட்டுக்கு வந்து கோர்ட்டு அறையில் இருந்தபடி, காணொலி காட்சி மூலம் அவசர வழக்குகள் என்று இல்லாமல் அனைத்து வகையான வழக்குகளையும் விசாரணைக்கு எடுத்தனர். மொத்தம் 33 அமர்வுகள் சென்னை ஐகோர்ட்டில் செயல்பட்டன.

இதேபோல் ஐகோர்ட்டு மதுரை கிளை மற்றும் 9 மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கமான முறையில் வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

ஆனால் ஒரு வாரத்துக்குள் பிரச்சினை தொடங்கி விட்டது. ஐகோர்ட்டு துணை பதிவாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் பணியாற்றிய பிரிவு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, இழுத்து மூடப்பட்டது.

இதுபோல் ஐகோர்ட்டில் 4 ஊழியர்களுக்கு அடுத்தடுத்து தொற்று கண்டறியப்பட்டது. இதனால், அவர்கள் பணியாற்றிய பிரிவுகள் மூடப்பட்டன.

இதைத்தொடர்ந்து ஐகோர்ட்டு நீதிபதிகள் சிலருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 3 நீதிபதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் தற்போது தங்களது வீட்டிலேயே தனியாக இருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து சென்னை ஐகோர்ட்டு பழைய நிலைக்கு மீண்டும் தள்ளப்பட்டு இருக்கிறது. ஐகோர்ட்டு இழுத்து மூடப்பட்டு உள்ளது. அண்மையில் ஐகோர்ட்டு உள்பட மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்ற ஊழியர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் பணி என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

இந்தநிலையில், அவசர வழக்குகள் மட்டும் வருகிற 30-ந்தேதி வரை காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் சி.குமரப்பன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் தற்போது வழக்குகள் விசாரிக்கும் முறை குறித்து ஐகோர்ட்டு நிர்வாகக்குழுவில் நீதிபதிகள் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர். தமிழகத்தில், குறிப்பாக சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் நிலவும் நிலை குறித்து அரசு வெளியிடும் அறிக்கைகள், பத்திரிகைகளில் வரும் செய்தி ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது கொரோனா வைரஸ் தொற்று விரைவாக பரவுவது தெரிகிறது.

எனவே, சென்னையில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டியதுள்ளது. ஐகோர்ட்டின் பணி மேற்கொள்ளும் முறையை மறுஆய்வு செய்ய வேண்டியதுள்ளது என்று நிர்வாக குழுவில் ஆலோசிக்கப்பட்டது.

இதன்படி, ஐகோர்ட்டில் பணி புரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி அனைத்து வழக்குகளையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு பதில், அவசர வழக்குகள் மட்டும் காணொலி காட்சி மூலம் சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் விசாரிக்க வேண்டும் என்று நிர்வாக குழு கூட்டத்தில் நீதிபதிகள் முடிவு செய்தனர்.

இதன்படி, சென்னை ஐகோர்ட்டில் 2 நீதிபதிகள் கொண்ட இரு டிவிசன் பெஞ்சுகள், ஒரு நீதிபதி கொண்ட 4 அமர்வுகள் என்று மொத்தம் 6 அமர்வுகள் அவசர வழக்குகளை காணொலி காட்சி மூலம் விசாரிக்கும்.

இதேபோல், ஐகோர்ட்டு மதுரை கிளையில் இரு நீதிபதிகள் கொண்ட ஒரு டிவிசன் பெஞ்ச், ஒரு நீதிபதி கொண்ட 3 அமர்வுகள் என்று மொத்தம் 4 அமர்வுகள் அவசர வழக்குகளை காணொலி காட்சி வாயிலாக விசாரிக்கும்.

சுழற்சி முறையில் பணி ஒதுக்கப்படும் நீதிபதிகள் ஐகோர்ட்டுக்கு வராமல், தங்களது வீடுகளில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரிப்பார்கள். இந்த நிலை வருகிற 30-ந்தேதி வரை நீடிக்கும்.

கொரோனா வைரஸ் தொற்று இல்லாத மாவட்டங்களில் நீதிபதிகள் கோர்ட்டுக்கு வந்து வழக்குகளை விசாரிக்கின்றனர். இந்த நடைமுறை உள்ள அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, புதுக்கோட்டை, கடலூர், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில், மாவட்ட தலைநகர் மற்றும் தாலுகா அளவில் உள்ள நீதிமன்றங்கள் வழக்கமான முறையில் நாளை (திங்கட்கிழமை) முதல் செயல்படலாம். திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை தாலுகா அளவில் உள்ள நீதிமன்றங்கள் மட்டும் செயல்படலாம்.

இதற்காக நீதிமன்றங்களை கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்துவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட முதன்மை நீதிபதிகள் மேற்கொள்ள வேண்டும். இதில் ஏதாவது பிரச்சினை இருந்தால், சென்னை ஐகோர்ட்டுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

சென்னை ஐகோர்ட்டில் மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் கொண்ட ஒரு டிவிசன் பெஞ்சும், மூத்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் கொண்ட மற்றொரு டிவிசன் பெஞ்சும், டிவிசன் பெஞ்ச் விசாரிக்கும் வழக்குகளை விசாரிப்பார்கள்.

இதேபோல், ரிட் வழக்குகளை நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், சிவில் வழக்குகளை நீதிபதி எம்.சுந்தர், ஜாமீன் வழக்குகளை நீதிபதி எம்.நிர்மல்குமார், பிற வகை கிரிமினல் வழக்குகளை நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் விசாரிப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்