சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை தடுக்க அரசு தீவிரம்

சென்னையில் கொரோனாவை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுடன், அரசு உயரதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2020-06-06 16:08 GMT
சென்னை,

சீனாவில் உருவெடுத்த ஆட்கொல்லியான கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனா வைரசின் ஆக்டோபஸ் கரங்களுக்கு இந்தியாவும் தப்பவில்லை. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 7-ந்தேதி, கொரோனா வைரசின் முதல் பாதிப்பு தொடங்கியது. இது ஏப்ரல் 1-ந்தேதியன்று 234 பேருக்கு என்ற நிலையை அடைந்தது. இந்த எண்ணிக்கை, மே 1-ந்தேதி 2 ஆயிரத்து 526 என்ற நிலை ஏற்பட்டது. இப்படி படிப்படியாக கொரோனா வைரசின் தாக்கம் ஊடுருவி வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 19 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனாவால் மொத்த உயிரிழப்பு 251 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில்  1,146 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 19,847 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 20,993 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் கொரோனாவை தடுக்க அதிரடி நடவடிக்கைகள் அரசு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ராயபுரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிப்பால் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன், அரசு உயரதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக வடசென்னையில் உள்ள பல்வேறு இடங்களை முழுமையாக தனிமைப்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்