தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை எப்போது திறக்கலாம்? மத தலைவர்களுடன், தலைமைச்செயலாளர் ஆலோசனை

மத்திய அரசு அளித்த தளர்வுகள் அடிப்படையில் தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை எப்போது திறக்கலாம்? என்று மத தலைவர்களுடன், தலைமைச்செயலாளர் கே.சண்முகம் ஆலோசனை நடத்தினார்.

Update: 2020-06-03 22:48 GMT
சென்னை,

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்பட பல்வேறு மத வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த வழிபாட்டு தலங்களை வருகிற 8-ந்தேதி முதல் நிபந்தனைகளுடன் திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள மத வழிபாட்டு தலங்களை மத்திய அரசு வழிகாட்டுதலின்படி மீண்டும் எப்போது திறக்கலாம் என்பது பற்றியும், அவ்வாறு திறக்கும்போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள் பற்றியும் கருத்துகளை பெறும் வகையில் பல்வேறு மத தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது.

தலைமைச்செயலாளர் கே.சண்முகம் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், ராமகிருஷ்ணா மடத்தின் செயலாளர்கள் சுவாமி சுகாதேவானந்தா, சுவாமி பத்மாஸ்தானந்தா, பிரம்மகுமாரி அமைப்பு சார்பில் ஜான்சி, சர்வதேச கிருஷ்ண பக்தி குழு இயக்கம் (இஸ்கான்) சார்பில் திருமால் ராவ், உத்தண்டி சித்தானந்தா ஆசிரமத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஈஸ்வரானந்தா, தமிழ்நாடு சுன்னத் முஸ்லிம் தலைமை காஜி சலாவுதீன் முகமது ஆயூப், தமிழ்நாடு ஷியா முஸ்லிம் தலைமை காஜி குலாம் முகமது மகாதிகான், ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி, இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர், தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயத்தின் துணை தலைவர் பால் வில்லியம்ஸ், சென்னை மயிலை கத்தோலிக்க பேராயர் சகாயராஜ் ஜோ, ஈ.சி.ஐ. திருச்சபை பேராயர் ஏ.மோகன், ஸ்ரீ குருநானக் சத்சங் சபா பொதுச்செயலாளர் பல்பீர் சிங், புளியந்தோப்பு ஜெயின் சங்கத்தின் செயலாளர் அஜித் உள்பட பல்வேறு மதங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மத தலைவர்களோடு தலைமைச்செயலாளர் கே.சண்முகம் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். அப்போது போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி உள்பட அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

ஆலோசனை கூட்டத்தின்போது வழிபாட்டு தலங்களை மத்திய அரசு அறிவித்தது போன்று 8-ந்தேதி முதல் திறக்கவேண்டும் என்று மத தலைவர்கள் வலியுறுத்தியதாக தெரிகிறது. ஒரு சிலர் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படுவதை தள்ளி வைக்க கோரியதாக கூறப்படுகிறது. அப்போது அரசு தரப்பில், வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் பட்சத்தில் அரசு வழிகாட்டுதல்களை கண்டிப்பான முறையில் பின்பற்ற வேண்டும் என்றும், முதல்-அமைச்சரிடம் கலந்து ஆலோசித்து இதற்கான உத்தரவுகள் விரைவில் பிறப்பிக்கப்படும் என்றும் கூறியதாக தெரிகிறது.

ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் உத்தண்டி சித்தானந்தா ஆசிரமத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஈஸ்வரானந்தா கூறுகையில், வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும். ஆன்-லைன் முறையில் முன்பதிவு செய்யும் 100 பேர்களை 10 பேர், 10 பேராக தரிசனத்துக்கு அனுமதிக்கலாம் என்று வலியுறுத்தினேன்’ என்றார்.

ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி பேசும்போது, ‘கொரோனா வேகமாக பரவுகிறது. மருந்துகளோ, முன்னெச்சரிக்கைகளால் அல்ல. நாம் தான் அதனை கட்டுப்படுத்த வேண்டும். நாம் தான் பொறுப்பு உணர்வோடு செயல்பட வேண்டும். எனவே வழிபாட்டு தலங்கள் திறக்கப்படுவதை குறைந்தது ஒரு மாதமாவது தள்ளி வைக்கவேண்டும் என்று வலியுறுத்தினேன்.’ என்றார்.

இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் நிருபர்களிடம் கூறுகையில், ‘நாட்டின் நலன் கருதியும், மக்கள் உயிரின் மதிப்புத்தன்மையை கருதியும் உணர்வுகளுக்கு இடம் கொடுத்துவிடாமல் அதனை திறம்பட செய்யவேண்டும். அதன் அடிப்படையில் தமிழக அரசு விரைவில் நல்ல முடிவு எடுக்கும். அந்த முடிவு இஸ்லாமியர்களின் நலன்களை பாதுகாப்பதாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை’ என்றார்.

மேலும் செய்திகள்