கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்துங்கள்’ எடப்பாடி பழனிசாமிக்கு கவர்னர் வேண்டுகோள்

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை இன்னும் அதிகப்படுத்துங்கள் என்று முதல்வர் பழனிசாமிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Update: 2020-06-02 23:30 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒவ்வொரு மாத இடைவெளியில் அரசிடம் கேட்டு வருகிறார். கடந்த மார்ச் 31-ந் தேதி, மே 4 ஆகிய தேதிகளில் இதுதொடர்பாக கவர்னர், முதல்-அமைச்சர் சந்திப்பு நடந்தது.

இந்த நிலையில் 3-ம் முறையாக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று சந்தித்து பேசினார்.

அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் கே.சண்முகம், முதல்-அமைச்சரின் செயலாளர் சாய்குமார், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி ஆகியோர் சென்றிருந்தனர்.

நேற்று மாலை 5.05 மணிக்கு தொடங்கி 5.55 மணிவரை இந்த சந்திப்பு நீடித்தது. அப்போது கொரோனாவினால் ஏற்பட்ட பாதிப்புகள், நோய் தடுப்பு தொடர்பாக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் உள்பட பல விபரங்கள் அடங்கிய முழு விபர அறிக்கையை கவர்னரிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்தார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள், பாதிக்கப்படும் மக்களுக்கு அரசு செய்து வரும் நிவாரண உதவிகள், வெளி மாநிலத்தவருக்கு அரசு செய்து தந்துள்ள வசதிகள், பொருளாதார மேம்பாட்டுக்காக செய்யப்பட்டுள்ள நிபந்தனை தளர்வுகள், எதிர்காலத்தில் எடுக்கப்பட உள்ள தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல அம்சங்கள் பற்றி கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்துரைத்தார்.

குறிப்பாக, சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் பற்றி முதல்-அமைச்சர் விரிவாக விளக்கம் அளித்தார். அப்போது கவர்னர், ‘தமிழகத்தில் கொரோனா தடுப்புக்கு நல்லவிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை பொருட்படுத்த தேவையில்லை. ஏனென்றால், பரிசோதனையை அதிகரிக்கும்போது தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கையும் உயரத்தான் செய்யும்’ என்றார்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக பரிசோதனை செய்யப்படுகிறது என்றும் இந்தியாவிலேயே கொரோனா தொடர்பான இறப்பு சதவீதமும் தமிழகத்தில் தான் குறைவாக உள்ளது என்றும் முதல்-அமைச்சர் கூறினார். இதற்கு பாராட்டுக்களை தெரிவித்த கவர்னர், கொரோனா பரிசோதனையை இன்னும் அதிகப்படுத்துங்கள் என்றும் இதே நிலை தொடர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை கூடங்களை அதிகரித்து இருக்கிறோம். மக்களுக்கு விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணெய் வழங்கப்பட்டதோடு, புலம் பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்களுக்கும் பல நிவாரண உதவிகள் செய்யப்பட்டுள்ளன என்று முதல்-அமைச்சர் கூறினார்.

முதல்-அமைச்சர் கூறியதற்கு பாராட்டுக்களை தெரிவித்த கவர்னர், பரிசோதனை கூடங்களை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அப்போது பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் உள்ள 7 கோடி மக்களுக்கும் ஆளுக்கு 2 முககவசம் என்ற வகையில் 14 கோடி முக கவசங்களை வழங்க இருக்கிறோம் என்று தெரிவித்தார். பின்னர் கவர்னர், தமிழகத்தில் கொரோனா தொடர்பாக எத்தனை பேர் வெண்டிலேட்டரில் உள்ளனர்? படுக்கை வசதிகள் எந்த அளவில் உள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு முதல்-அமைச்சர், 5 பேர் மட்டுமே வெண்டிலேட்டரில் இருக்கின்றனர். கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களில் 56 சதவீதம் பேர் குணமடைந்து சென்றுவிட்டனர். சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்காக 17 ஆயிரத்து 500 படுக்கைகளும், தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன என்று குறிப்பிட்டார். அப்போது, படுக்கைகளின் எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டும் என்று கவர்னர் கேட்டுக்கொண்டார்.

இந்த சந்திப்பின்போது கவர்னரின் செயலாளர் ஆனந்த்ராவ் விஷ்ணு பட்டீல் உடனிருந்தார்.

மேலும் செய்திகள்