7 கோடி மக்களுக்கு தலா 2 வீதம் தமிழகத்தில் 14 கோடி முககவசங்கள் இலவசமாக வழங்க பரிசீலனை எடப்பாடி பழனிசாமி பேட்டி

நோய் பரவலை தடுக்க 7 கோடி மக்களுக்கு தலா 2 வீதம் 14 கோடி முககவசங்கள் இலவசமாக வழங்க பரிசீலனை செய்து வருவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-02 23:00 GMT
சென்னை,

சென்னையில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டத்துக்கு பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த குற்றச்சாட்டில் சில விளக்கங்களை தெரிவிக்க விரும்புகின்றேன். முதல்-அமைச்சர், மாவட்ட கலெக்டர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றபோது, சில கருத்துக்களை தெரிவித்திருக்கின்றார் என்று சொல்லி 9 லட்சத்து 14 ஆயிரம் பி.சி.ஆர். கிட் இருப்பதாகவும், அதில் 4.66 லட்சம் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், மீதம் 4.47 லட்சம் கருவிகள் இருக்கவேண்டும் என்றும், ஆனால் முதல்-அமைச்சர் 1.76 லட்சம் தான் கையிருப்பு உள்ளதாக சொல்லியிருக்கின்றார். மீதி எங்கே? என்று மு.க.ஸ்டாலின் கேட்டுள்ளார்.

1.76 லட்சம் கிட் ஆபீசில் வைத்திருக்கிறார்கள். மற்றவைகளெல்லாம் கிட்டத்தட்ட 2.71 லட்சம் பி.சி.ஆர். கிட் 43 பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அப்படி அங்கே பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி வைத்தால் தான், அந்த கருவியை பயன்படுத்தி பரிசோதனை செய்ய முடியும். ஆகவே வேண்டுமென்றே திட்டமிட்டு, ஒரு தவறான செய்தியை மு.க.ஸ்டாலின் பரப்பி இருக்கிறார். ‘ஊரடங்கு காலத்தில் தன்னை முன்னிலைப்படுத்தவேண்டும் என்ற விளம்பரத்திற்காக இந்த ஊரடங்கை பயன்படுத்துகிறார் முதல்-அமைச்சர்’ என்று மு.க.ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். நான் ஏதோ முன்னிலைப்படுத்தி விளம்பரப்படுத்தி கொண்டேனா? அவர் தான், விளம்பரத்திற்காக இந்த அறிக்கையை வெளியிட்டியிருக்கிறார் என்று நான் கூறுகிறேன்.

அதுமட்டுமல்லாமல் நேற்று வரைக்கும் 15 லட்சத்து 45 ஆயிரத்து 700 பி.சி.ஆர். கிட் ஆணை வழங்கப்பட்டிருக்கின்றன. இதுவரை பெறப்பட்டது 11 லட்சத்து 51 ஆயிரத்து 700. நன்கொடையாக பெறப்பட்ட பி.சி.ஆர். கிட் 53 ஆயிரத்து 516. மத்திய அரசு வழங்கியது 50 ஆயிரம் பி.சி.ஆர். கிட். மொத்தம் தமிழக அரசால் பெறப்பட்ட பி.சி.ஆர். கிட் 12 லட்சத்து 55 ஆயிரத்து 216. தற்போது நம்முடைய டி.என்.எம்.எஸ்.சி.யில் இருப்பு இருப்பது 4 லட்சத்து 59 ஆயிரத்து 800. மருத்துவமனைகளுக்கு பரிசோதனை செய்வதற்காக வழங்கப்பட்டது 7 லட்சத்து 95 ஆயிரத்து 416.

இதில் பரிசோதனை செய்யப்பட்ட கிட்டுகளின் எண்ணிக்கை 5 லட்சத்து 3 ஆயிரத்து 339. தற்போது ஆங்காங்கே இருக்கின்ற பரிசோதனை மையங்களில் இருப்பாக இருக்கின்ற பி.சி.ஆர். கிட் எண்ணிக்கை 2 லட்சத்து 92 ஆயிரத்து 77. இதுதான் உண்மை நிலவரம். இதை யாரும் மறைக்கவும் இல்லை. இதில் எந்தவித முறைகேட்டிற்கும் வழியும் இல்லை என்பதை தெளிவுப்பட தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தின் சுகாதாரத்துறை கட்டமைப்பு சிறப்பாக இருப்பதால் தமிழகத்தில் நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.

நம்முடைய அரசு மருத்துவமனையிலே 2 ஆயிரத்து 741 வென்டிலெட்டர் இருக்கிறது. இதில் 620 புதிதாக வாங்கப்பட்டது. தனியார் மருத்துவமனையில் 630 வென்டிலெட்டர்கள் இருக்கிறது. எல்லாம் சேர்த்தால் 3 ஆயிரத்து 371 வென்டிலெட்டர்கள் இருக்கிறது. இதனால் அச்சப்படவேண்டிய அவசியமே கிடையாது. ஆனால் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கின்றபோது ‘வென்டிலெட்டர்’ பயன்படுத்துவது மிக, மிக குறைவு. வெறும் 5 சதவீத பேருக்கு தான் அதனை பயன்படுத்துகிறோம். மீதி உள்ளவர்களுக்கு அது தேவையில்லை.

‘வென்டிலேட்டர்’ இல்லாததால் தான் குணமடைய செய்யவில்லை என்று மு.க.ஸ்டாலின் சொல்வது அப்பட்டமான பொய். வடிகட்டிய பொய். இந்தியாவிலேயே அதிகமான ‘வென்டிலெட்டர்’ உள்ள மாநிலம் தமிழ்நாடு. ‘வென்டிலெட்டர்’ பயன்படுத்தக்கூடிய அளவிற்கு நோய் முற்றவில்லை. 5 சதவீதம் பேருக்கு தான் அதை பயன்படுத்தக் கூடிய நிலை இருக்கிறது. வேண்டுமென்றே தவறான தகவலை மக்களுக்கு அளித்து குழப்பம் செய்ய வேண்டாம் என்று மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.

சென்னையில் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 17 ஆயிரத்து 500 படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது. சென்னை மாநகராட்சியில், 1.5 கோடி முககவசம் வாங்கி ஏழை-எளிய மக்களுக்கு கொடுக்கிறார்கள். இதை பயன்படுத்தவேண்டும். மேலும் எல்லா குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரசே விலை இல்லாமல் முககவசம் வழங்குவதற்கு பரிசீலனை செய்து கொண்டிருக்கிறது. அதாவது 2.1 கோடி குடும்பத்தை சார்ந்த சுமார் 7 கோடி பேருக்கு தலா 2 முககவசம் வீதம் 14 கோடி முககவசங்கள் வழங்க அரசு பரிசீலித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்