ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2020-06-01 23:00 GMT
சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘3 நாளில் கொரோனா ஒழிந்துவிடும்‘ என்று ஏப்ரல் 16-ந்தேதி உத்திரவாதம் கொடுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் 5-வது முறையாக ஜூன் 30-ந் தேதி வரை சில தளர்வுகளுடன் தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை நீட்டித்து முதல்-அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில், நோய்த்தொற்றில் இருந்து மக்களை பாதுகாத்து வருகிறோம், தேவையான நிவாரணங்களை செய்து வருகிறோம், குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே அதிகம், நோய்த்தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகள் மிகக்குறைவு என்று தனது கொரோனா தோல்வியை திசை திருப்பிடும் நோக்கில் கதை கதையாக அளந்திருக்கிறார்.

நோய்த்தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கிறோம் என்றால் தமிழகத்தில் இதுவரை 22 ஆயிரத்து 333 பேருக்கு தொற்று ஏற்பட்டது எப்படி? தினமும் 500 முதல் ஆயிரத்துக்கும் மேலான எண்ணிக்கையில் நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதும், நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) மட்டும் 1,149 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதும் இந்த தமிழ்நாட்டில்தானே? தினமும் நோய் பாதிப்பு அதிகரித்து வரும் சென்னை இருப்பதும் இந்த மாநிலத்தில்தானே? மக்களை பாதுகாக்கிறோம் என்று முதல்-அமைச்சர் சொல்வது உண்மைக்கு மாறானது அல்லவா? அவருக்கே அது வேடிக்கையாகவும், வினோதமாகவும் இல்லையா?

உயிரிழப்புகள் குறைவு என்று முதல்-அமைச்சர் தனக்குத்தானே பெருமை பாராட்டிக்கொள்வது ஈவு, இரக்கமற்ற எண்ணத்தின் வெளிப்பாடு. 173 குடும்பங்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று பாராமல் இந்த எண்ணிக்கை குறைவாக தெரியுமானால் அவர்களுக்கு அதிகார நோய் ஆழமாக தாக்கியிருக்கிறது என்று பொருள். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் 5 ஆயிரம் வழங்க சொன்னேன். அந்த குறைந்தபட்ச நிவாரணத்தைக்கூட இந்த அரசு கொடுக்கவில்லை.

ஒன்றிணைவோம் வா என்ற உன்னத திட்டத்தை அறிவித்து மளிகை பொருட்கள், காய்கறிகள், மருந்து பொருட்கள் ஆகியவற்றை தி.மு.க.வின் சார்பில் வழங்கினோம். மக்களிடமிருந்து வந்த கோரிக்கை மனுக்களை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். ஆனால் நடவடிக்கை எடுப்பதற்கு பதில் பொய் பேட்டிகள் வாங்கி வெளியிட்டு தி.மு.க.வின் முயற்சியை களங்கப்படுத்தவே நினைத்தார்கள். மக்களுக்கு எதுவும் தரமுடியாது என்பதற்காக தடைகளை தளர்த்துகிறோம். நீங்களே உங்களை காப்பாற்றி கொள்ளுங்கள் என்பதை சொல்லாமல் சொல்லி கடமையில் இருந்து தன்னை கழற்றிக்கொண்டுள்ளார் முதல்-அமைச்சர். இது ஆபத்தானது. மேலும் அதிகமான கொரோனா பரவலுக்கே வித்திடும். பரிசோதனைகளை அதிகப்படுத்துவதே நோய்த்தொற்று பரவாமல் தடுக்க ஒரே வழி என்று தெரிந்தும், அதுபற்றி எதுவுமே முதல்-அமைச்சரின் அறிக்கையில் இல்லை.

மாவட்ட வாரியாக பரிசோதனை, டெஸ்ட் கிட் விவரங்களை வெளியிடுவதில் அ.தி.மு.க. அரசுக்கு ஏன் இந்த மயான அமைதி? பரிசோதனை மட்டுமல்ல, மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கும் பஞ்சம் என்ற நிலைதான் இன்றைக்கு உள்ளது. 5-வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் கூட உயிரிழக்க இந்த அரசு அனுமதிக்காது என்று கூறிய அரசுக்கு வெண்டிலேட்டர் கொள்முதலில் ஏன் இந்த அலட்சியம்? படுக்கைகள் உருவாக்குவதிலும் ஏன் இன்னமும் கூட மெத்தனம்?

ஆகவே இதுவரை அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தை தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளும் விளம்பரத்திற்காக வீணடிக்காமல், ஜூன் மாதத்தையாவது உண்மையான மக்கள் விசுவாசத்துடன் முறையாக பயன்படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்தி மக்களை காப்பாற்ற எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயற்சி செய்யவேண்டும். அதை விடுத்து அ.தி.மு.க.வுக்குள் குழு அரசியல் நடத்த ஒவ்வொரு அமைச்சராக இறக்கிவிட்டு எதிர்க்கட்சிகளை ஏசவும், பேசவும் செய்வதால் எவ்வித பயனும் ஏற்படாது என்று எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்