வழக்குகளை எதிர்கொள்ள மாவட்டந்தோறும் வழக்கறிஞர்கள் குழு அமைக்க முடிவு; தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்

வழக்குகளை எதிர்கொள்ள மாவட்டந்தோறும் வழக்கறிஞர்கள் குழு அமைப்பது என தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

Update: 2020-05-24 06:03 GMT
சென்னை,

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.

தி.மு.க. நிர்வாகிகள் மீது முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தூண்டுதலின் பெயரில் பொய் வழக்குகள், சட்ட விரோத ஜனநாயக விரோத கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.  இதுபற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அக்கட்சி தரப்பில் கூறப்பட்டு இருந்தது.

இந்தநிலையில், கூட்ட முடிவில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையை அரசு சரியாக செய்யவில்லை என குற்றச்சாட்டு கூறப்பட்டது.  தி.மு.க. தோழர்கள் மற்றும் ஐ.டி. பிரிவினரை பொய் வழக்கு போட்டு கைது செய்கின்றனர் என்றும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.

கோயம்பேடு சந்தையை இடமாற்றம் செய்வதில் ஏற்பட்ட தாமதமே தொற்று அதிகரிக்க காரணம்.  கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடாமல் கைது நடவடிக்கையில் ஈடுபடுவதா? என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அதனால், வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கை ஆகியவற்றை எதிர்கொள்ள மாவட்டந்தோறும் வழக்கறிஞர்கள் குழுவை அமைப்பது என்று தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்