உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாக குழு தலைவராக பொறுப்பேற்ற மத்திய மந்திரி ஹர்ஷவர்தனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாக குழு தலைவராக பொறுப்பேற்ற மத்திய மந்திரி ஹர்ஷவர்தனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-22 16:25 GMT
சென்னை,

ஐ..நா.வின் உலக சுகாதார அமைப்பின் இரண்டு நாள் மாநாடு விரைவில் நடக்க உள்ளது. தற்போது உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத்தில் 34 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் தலைவராக உள்ள ஜப்பானைச் சேர்ந்த ஹிரோக்கி நகாடானி பதவி காலம் நிறைவடைந்ததையொட்டி, இந்த வாரியத்தின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக நடந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும், மே 22-ம் தேதி பதவியேற்க உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவராக மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை மந்திரி ஹர்ஷ வர்தன் காணொலி காட்சி மூலம் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.  மேலும் ஹர்ஷவர்தன் 3 ஆண்டு காலம் இந்த பதவியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாக குழு தலைவராக பொறுப்பேற்ற மத்திய மந்திரி ஹர்ஷவர்தனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஹர்ஷவர்தன் மிகப்பெரிய பொறுப்பை வகிப்பது இந்தியாவுக்கு பெருமை என்றும் தமிழக மக்கள் மற்றும் தமிழக அரசு சார்பில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்