கொரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க தமிழக அரசு சிக்கன நடவடிக்கை செலவினங்கள் 50 சதவீதம் வரை குறைப்பு

கொரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை எதிர்கொள்ள தமிழக அரசு அதிரடியாக சிக்கன நடவடிக்கைகளை அறிவித்து உள்ளது. செலவினங்களை 50 சதவீதம் வரை குறைக்க உத்தரவிட்டு உள்ளது.

Update: 2020-05-22 00:15 GMT
சென்னை,

கொரோனா நோய்த்தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா தடுப்பு பணிகளுக்காக அதிகம் செலவிட வேண்டி இருப்பதாலும், வரி வருவாய் குறைந்ததாலும் தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவன அதிகாரிகள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பயணம் மேற்கொள்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரசுத் துறைகளில் மேற்கொள்ளப்படும் செலவினங்களுக்காக அந்தந்த துறைகளின் மானிய கோரிக்கைகளின் போது நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் கொரோனாவினால் ஏற்பட்ட தாக்கங்களின் காரணமாக இந்த நிதி ஆண்டில் மானிய கோரிக்கைகளில் பல்வேறு தலைப்புகளின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்படுகின்றன.

ஏனென்றால், கட்டுப்பாட்டு பகுதிகள், தடுப்பு நடவடிக்கைகள், நிவாரணம், தொற்றை எதிர்கொள்ளும் நடவடிக்கை என பல அம்சங்களில் கூடுதல் செலவு குவிந்து கிடக்கிறது. எனவே இந்த சூழ்நிலை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டதில், நிதி தொடர்பான அழுத்தங்களை குறைப்பதோடு, நலத்திட்டங்களையும் முக்கிய முதலீடுகளையும் உறுதி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

மேலும், இந்த நிதி ஆண்டில் தவிர்க்கக்கூடிய சில செலவினங்களை கட்டுப்படுத்த அரசு முடிவு செய்து உள்ளது. அதன் அடிப்படையில், 2020-21-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மானிய கோரிக்கைகளில் ஒதுக்கப்பட்ட நிதியை குறைப்பதற்கு அரசு உத்தரவிடுகிறது.

அதன்படி, அரசுத் துறைகளில் வழக்கமான அரசு அலுவலக செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 20 சதவீதம் குறைக்கப்படுகிறது. புதிய அலுவலகம் அமைத்தல், ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்றவற்றுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 50 சதவீதம் வெட்டு அமல்படுத்தப்படுகிறது.

முன்னெச்சரிக்கையாக சமூக இடைவெளியை வரும் மாதங்களில் தொடர்ந்து பின்பற்ற வேண்டி உள்ளது. எனவே, பொது நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான விளம்பரங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 25 சதவீதம் குறைக்கப்படுகிறது.

அரசுத் துறைகளுக்கான செலவுக்கணக்குகள் மூலமாகவோ அல்லது பொதுத்துறை நிறுவனங்கள், சுயாட்சி அமைப்புகள் வழியாகவோ வழங்கப்படும் அனைத்து வகை மதிய, இரவு உணவுகளும் மறு உத்தரவு வரும்வரை வழங்கப்படக்கூடாது. அனைத்துக்கும் தடை விதிக்கப்படுகிறது. இந்த செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதியில் 50 சதவீதம் மட்டுமே செலவிடப்படலாம்.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மற்றும் சில திட்டங்கள் ஆகியவை தவிர மற்ற துறைகளுக்கு எந்திரங்கள், உபகரணங்கள் வாங்குவது ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இதற்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில் 25 சதவீதம் குறைக்கப்படுகிறது.

மருத்துவம், அவசர கால ஊர்திகள், காவல் மற்றும் தீயணைப்பு சேவைகள், வி.வி.ஐ.பி. பாதுகாப்பு ஆகியவற்றுக்கு மட்டுமே புதிய வாகனங்கள் வாங்கப்படும். மற்ற துறைகளுக்கு புதிய வாகனங்கள் வாங்குவது முற்றிலும் தடை செய்யப்படுகிறது. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 50 சதவீதம் குறைக்கப்படுகிறது.

கொரோனா தொற்று காரணமாக வரும் மாதங்களில் அரசு பயிற்சிக்கான நடைமுறைகளில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படுகின்றன. பணியில் புதிதாக சேருவோருக்கான அடிப்படை பயிற்சி, கொரோனா நோய்த் தொற்று குறித்த பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றுக்கு மட்டுமே அனுமதி உண்டு.

வெளிநாடுகளில் சென்று பயிற்சி பெறுவது உள்பட மற்ற அனைத்து வகை பயிற்சிகளும் முற்றிலும் தடை செய்யப்படுகிறது. இந்த பயிற்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளில் 50 சதவீதம் குறைக்கப்படுகிறது.

பல்வேறு ஆவணங்கள், அரசு உத்தரவுகளை அச்சிடும் செலவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 25 சதவீதம் குறைக்கப்படுகிறது. அரசு அலுவலகங்களில் உள்ள மிகப்பழைய மற்றும் இயங்காத கணினிகளை மாற்றுவதற்கு மட்டும் அனுமதிக்கப்படும். புதிய கணினிகளும், இதர உபகரணங்களை வாங்குவதற்கு அனுமதியில்லை. இதற்காக ஒதுக்கப்பட்ட ஒட்டுமொத்த நிதியில் 25 சதவீதம் குறைக்கப்படுகிறது.

அரசுப் பயணங்களுக்கான படிகளை வழங்குவது மற்றும் தினசரிப் படிகளை வழங்குவதில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படுகின்றன. அரசு அலுவலர்கள், உயர் அதிகாரிகள் மேற்கொள்ளும் பயணங்களுக்கு அனுமதி வழங்குவது வரையறுக்கப்பட்ட அளவிலேயே இருக்க வேண்டும்.

இந்த பயணங்கள் முற்றிலும் அலுவலக காரணங்களுக்காகவே இருக்க வேண்டும். வழக்கமான ஆய்வுக் கூட்டங்கள் காணொலிக்காட்சி, டெலி கான்பரன்சிங் வழியாக நடத்தப்பட வேண்டும். அரசு செலவில் வெளிநாட்டுப்பயணங்களை மேற்கொள்ள அனுமதி கிடையாது.

தமிழகத்துக்குள் அதிகாரிகள் விமான பயணங்கள் மேற்கொள்ள அனுமதி கிடையாது. ஆனால் அதற்கான கட்டணம், ரெயில் மூலம் பயணிப்பதற்கான கட்டணத்தைவிட குறைவாகவோ அல்லது சமமாகவோ இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும்.

தமிழகத்துக்கு வெளியே மேற்கொள்ளும் விமான பயணங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. டெல்லியில் நடைபெறும் மத்திய அரசின் கூட்டங்களில் அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தின் உறைவிட ஆணையாளர்கள் கூடுமான அளவில் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.

எந்தவகை ஊதிய விகிதத்தைக் கொண்ட அரசு அதிகாரி என்றாலும், விமானப்பயணத்தில் உயர் வகுப்புக்கு அனுமதி இல்லை. தினசரி படிகளில் 25 சதவீதம் குறைக்கப்படுகிறது. தகுதியுள்ள அளவில் 75 சதவீதம் மட்டுமே வழங்கப்படும்.

பொதுவான பணியிட மாற்றங்கள் 2020-21-ம் ஆண்டில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இடமாற்றப் பயணங்களுக்கான செலவை குறைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பணியிட மாறுதல்கள் நிர்வாக ரீதியில் உயர் அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். இருதரப்பு விருப்ப மாறுதல்களை அனுமதிக்கலாம்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அனுமதிக்கப்படும் விடுப்பு பயணச் சலுகை திட்டம் மறு உத்தரவு வரும்வரை தள்ளிவைக்கப்படுகிறது.

அரசு, உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி வாரியங்கள் மற்றும் பொது நிறுவனங்களின் கணக்குகளில் இருந்து பரிசுப் பொருள்கள் வழங்குவது, பூங்கொத்துகள், சால்வைகள், நினைவுப் பரிசுகள், மலர் மாலைகள் உள்ளிட்ட இதர பொருள்களை வாங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

20 நபர்களுக்கு மேலாக கூட்டங்கள், கருத்தரங்குகள், பட்டறைகள், கலாசார நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆய்வுக் கூட்டங்களை நடத்த மட்டுமே விலக்கு அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதேபோல் புதிய பணியிடங்களை உருவாக்க தடை விதித்து நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் அரசாணை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தின் பொருளாதார சீரமைப்புக்காக, சில தவிர்க்க முடியாத நிகழ்வுகள் தவிர, புதிய அரசுப் பதவிகளை உருவாக்குவதற்கு முற்றிலும் தடை விதித்து கடந்த 1992-ம் ஆண்டு ஜூன் 16-ந்தேதி உத்தரவிடப்பட்டது.

கடுமையான நிதிச் சிக்கலில் தவித்த நிலையில் அனைத்து அரசுத் துறைகளிலும் புதிய பதவியிடங்களை உருவாக்க தடை விதிக்கப்பட்டதோடு, அந்தப் பணியிடங்கள் மறு நியமனம் மூலம் செயல்படவும் அனுமதித்து 2001-ம் ஆண்டு நவம்பர் 23-ந்தேதி உத்தரவிடப்பட்டது.

தற்போது கொரோனாவினால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், ஊதியம் தொடர்பான செலவினங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கும் நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து அரசுத் துறைகளிலும் புதிய பதவிகளை உருவாக்க தடை விதிக்கப்படுகிறது.

நுழைவு நிலைப்பதவிகளில் காலியிடங்களை நிரப்ப ஆள் எடுக்கும் நடவடிக்கையும், கருணை அடிப்படையில் செய்யப்படும் பணி நியமனங்களையும் அனுமதிக்கலாம். தற்போதுள்ள நடைமுறைப்படி பதவி உயர்வு அளிப்பது தொடரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருக்கிறது.

மேலும் செய்திகள்