பதிவு பெறாத நெசவாளர்களுக்கு ரூ.2000 நிதியுதவி- தமிழக அரசு அறிவிப்பு
நலவாரியத்தில் பதிவுசெய்யாத கைத்தறி நெசவாளர்களுக்கு 2000 ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. தற்போது ஊரடங்கு வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
இந்த ஊரடங்கின் காரணமாக பல்வேறு தரப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும், பொது மக்களுக்கும் நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெறாத கைத்தறி நெசவாளர்கள், தங்களுக்கும் நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், பதிவு பெறாத நெசவாளர்களுக்கு ரூ.2000 நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் தகுதியான நெசவாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு விண்ணப்பம் செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதியுதவிக்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகளை கைத்தறி, துணிநூல் துறை இயக்குநர் வழங்குவார் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.