தெற்கு வங்கக்கடலில் அம்பன் புயல் அதிஉச்ச உயர் தீவிர புயலாக மாறியது- வானிலை ஆய்வு மையம்
தெற்கு வங்கக்கடலில் அம்பன் புயல் அதிஉச்ச உயர் தீவிர புயலாக மாறியது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை,
தெற்கு வங்க கடலில் உருவான அம்பன் புயல் அதி உச்ச உயர் தீவிர புயலாக மாறியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ”சென்னைக்கு கிழக்கே சுமார் 650 கி.மீட்டர் தொலைவில் அதி உச்ச உயர் தீவிர புயல் மையம் கொண்டுள்ளது.
இந்தப் புயலானது ஒடிசா கடற்கரையை நோக்கி வட மேற்கில் நகர்ந்து பின்னர் அதி தீவிர புயலாக மாறக்கூடும் எனவும் அதன்பின்னர், 20ம் தேதி மாலை மேற்கு வங்க திகா கடற்கரை மற்றும் வங்கதேசத்தின் ஹட்டியா தீவுகளுக்கு இடையே கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் மத்திய வங்கக் கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. ஆம்பன் புயல் மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.