அரசியல் ஆதாயம் தேடவேண்டும் என்ற அடிப்படையில் செயல்படாதீர்கள் - மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்
தி.மு.க. மனு வாங்கினால் யார் செய்ய வேண்டும்? என்றும், அரசியல் ரீதியாக ஆதாயம் தேடவேண்டும் என்ற அடிப்படையில் மு.க.ஸ்டாலின் செயல்படக் கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை,
மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோயம்பேட்டில் தொற்று ஏற்பட்டவுடன் உடனடியாக மே 5-ந் தேதி அன்று வியாபாரிகளுடைய சம்மதத்துடன் கோயம்பேடு மூடப்பட்டது. 10-ந் தேதி அன்று காய்கறி சந்தை திருமழிசையில் தொடங்கப்பட்டது.
அரசைப்பொறுத்தவரை, சமயோசிதமாக முடிவு செய்ய வேண்டும். தி.மு.க. போல் எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற செய்ய முடியாது. ஏனென்றால், வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படுவது மட்டுமல்லாமல், காய்கறிகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் தான் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, அதனை உணர்ந்து தான், எதுவுமே நன்கு யோசித்து எல்லோருடைய நலனும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அரசு எடுத்த சமயோசிதமான ஒரு நல்ல முடிவு.
இந்த முடிவை மு.க.ஸ்டாலின் கொச்சைப்படுத்தும் விதமாக, அதாவது வியாபாரிகள் மீது பழி போடுவது, பொதுமக்கள் மீது பழி போடுவது, தொழிலாளர்கள் மீது பழி போடுவது என குற்றச்சாட்டை சொல்லியிருக்கின்றார். எங்களுக்கு பழி போட்டுத் தப்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது. நிதர்சனமான, ஒரு வெளிப்படையான, உணர்வுபூர்வமாக மக்களுக்கு செய்ய வேண்டுமென்ற அடிப்படையிலே முதல்-அமைச்சர் எல்லாவித நடவடிக்கைகளையும் துரிதமாக எடுத்து வருகிறார்.
கடமையை செய்கிறோம்
அனைத்து வகையிலும் அலசி ஆராய்ந்து யாருக்கும் எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற அடிப்படையில் கோயம்பேடு மார்க்கெட் மாற்றப்பட்டது. வியாபாரிகளுக் கும், பொதுமக்களுக்கும் அவர் களுடைய கஷ்டம். அரசைப் பொறுத்தவரைக்கும் தொற்றுநோயை ஒழிக்க வேண்டும். இவ்வாறு இருக்கையில், அவர்களுக்கு ஒத்துழைப்புத் தருவதன் மூலம் தான் நடைபெறும்.
பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி அதற்கு ஒரு முடிவு ஏற்பட்ட பின்பு தான் தற்பொழுது திருமழிசையில் நான்கைந்து நாட்களில் ஒரு மார்க்கெட் உருவாகியுள்ளது. எங்களுடைய கடமையை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். ஒன்றிணைவோம் என்று சொல்லிவிட்டு கிட்டத்தட்ட 2 லட்சம் பேருக்கு இரண்டு நாளில் யாராவது பேச செய்ய முடியுமா?. அரசை பொறுத்தவரை நடவடிக்கை எடுக்கிறது.
யார் செய்ய வேண்டும்?
தி.மு.க. மனு வாங்கினால் யார் செய்ய வேண்டும்? தி.மு.க. தானே நிவாரணம் கொடுக்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரை அரசு வேகமாக இயங்குகிறது. அரசியல் ரீதியாக ஆதாயம் தேட வேண்டும் என்ற அடிப்படையில் எல்லாவற்றையும் செய்யக்கூடாது. தலைமை செயலாளர் சண்முகம் ஒரு நேர்மையான அதிகாரி. விருப்பு வெறுப்பில்லாமல் அவருடைய பணிக்காலத்தில் எல்லோராலும் பாராட்டக்கூடிய ஒருவர்.
எங்களைப் பொறுத்தவரை, எல்லாவற்றுக்கும் குறிப்பாக, இந்த கொரோனா தொற்று விஷயத்தில், இந்த நோய் பரவாமல் இருப்பதற்கு போர்க்கால அடிப்படையில் எல்லாவிதமான நடவடிக்கைகளும் எடுத்து, கிட்டத்தட்ட 12 குழுக்கள், தலைமைச் செயலாளர் தலைமையில் அமைத்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.