தலைமை செயலாளர் சண்முகம் மீது உரிமை மீறல் நடவடிக்கை - மக்களவை சபாநாயகருக்கு டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் கடிதம்

பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை அளிக்க சென்ற போது தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் தங்களிடம் அவமரியாதையாக நடந்து கொண்டதால் அவர் மீது உரிமை மீறல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் எம்.பி. ஆகியோர் கடிதம் அனுப்பி உள்ளனர்.

Update: 2020-05-14 19:45 GMT
சென்னை, 

தி.மு.க. மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் எம்.பி. ஆகியோர் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக தி.மு.க. சார்பில் தொடங்கப்பட்ட ஒன்றிணைவோம் வா செயல்திட்டத்தின் மூலம் பொதுமக்களிடம் இருந்து 15 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. இதில், 14 லட்சம் பேருக்கு தேவையான உதவியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் நிர்வாகிகள் செய்தனர்.

மீதமுள்ள 1 லட்சம் மனுக்களை பொறுத்தமட்டில் அரசு துறைகள் மூலம் தான் தீர்வு காணப்பட வேண்டும் என்பதால் அந்த மனுக்களை தமிழக அரசின் தலைமை செயலாளரிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தும்படி மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, கடந்த 13-ந் தேதி எம்.பி.க்கள் கலாநிதி, தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோருடன் நாங்கள் தலைமை செயலாளர் சண்முகத்தை நேரில் சந்தித்து மனுக்களை ஒப்படைக்கவும், அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவும் முன்கூட்டியே அனுமதி பெற்று சென்னையில் உள்ள தலைமை செயலகத்துக்கு நேரில் சென்றோம்.

ஆனால், தலைமை செயலாளர் எங்களை கருத்தில் கொள்ளாமல் அதிர்ச்சியூட்டும் வகையில் மரியாதை குறைவாக நடத்தினார். குறைந்தபட்ச வரவேற்பு முறைகளை கூட அவர் பின்பற்றவில்லை. எங்களை இருக்கையில் அமருங்கள் என்று கூட அவர் கூறவில்லை. வேறு வழியில்லாமல் நாங்களாகவே இருக்கையில் அமர்ந்தோம்.

அந்த அறையில் தொலைக் காட்சி அதிக ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தது. தலைமை செயலாளர் சண்முகம் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்தாரே தவிர எங்களை கண்டுகொள்ளவில்லை. எங்களது பேச்சுவார்த்தைக்கு தொலைக்காட்சியின் அதிக ஒலி இடையூறாக இருக்கும் என்று கருதி தலைமை செயலாளரின் உதவியாளர் ஒருவர் தொலைக்காட்சியை ஆப் செய்வதற்கு சென்ற போது தலைமை செயலாளர் அதை தடுத்து விட்டார். நாங்கள் மத்திய மந்திரிகளாக இருந்தவர்கள் என்பதை கூட அவர் கருத்தில் கொள்ளவில்லை.

இருந்தபோதிலும், ஒன்றிணைவோம் வா திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களை அளித்து அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், அதற்கு குறிப்பிட்ட கால அவகாசத்தை நிர்ணயிக்கும்படியும் எடுத்துக் கூறினோம்.

அதற்கு தலைமை செயலாளர் சண்முகம், போதிய ஊழியர்கள் இல்லாத நிலையில் மனுக்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்க முடியும் என்று சொல்லமுடியாது என்றார்.

மீண்டும் ஒரு முறை இந்த கோரிக்கையை வலியுறுத்திய போது, ‘வெளியில் சென்று பத்திரிகையாளர்களை சந்திக்க போகிறீர்களா?. பத்திரிகையாளர்களிடம் எதை வேண்டுமானாலும் சொல்லுங்கள். அதைப்பற்றி கவலை இல்லை’ என்றார். இதைக்கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.

மேலும், மனு அளிக்க வந்துள்ளவர்கள் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் என்பதை மறந்து எடுத்தெறிந்து பேசும் விதமாக ‘உங்களை போன்ற ஆட்களிடம் இது தான் பிரச்சினை’ என்று பொறுப்பற்ற முறையில் பேசினார். இதற்காக அவர் தனது வருத்தத்தை இதுவரை தெரிவிக்கவில்லை.

கொரோனா தொற்றால் அல்லல்படும் தமிழக மக்களுக்கு நிவாரண உதவி பெற்றுத்தர வேண்டுகோள் விடுக்க சென்ற எங்களை கண்ணிய குறைவாக நடத்தியதோடு மட்டுமல்லாமல் வேண்டுமென்றே அவமரியாதை செய்த தலைமை செயலாளர் சண்முகம் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுத்து நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்க கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்