எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை தள்ளிவைக்க கோரி வழக்கு - ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை தள்ளிவைக்க கோரி வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
சென்னை,
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வருகிற ஜூன் 1-ந்தேதி முதல் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை சூளைமேட்டை சேர்ந்த வக்கீல் எஸ்.ஸ்டாலின் ராஜா என்பவர், தொடர்ந்துள்ள பொதுநல வழக்கில், ‘தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வருகிற ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ள நிலையில், வருகிற ஜூன் 1-ந்தேதி முதல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள சிறுவர்களுக்கு இந்த வைரஸ் எளிதில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத போகின்றனர். அவர்கள் தேர்வு எழுதும்போது சமூக இடைவெளி விட்டு இருப்பது என்பது கடினமான ஒன்று. மேலும் சில மாணவர்கள், நோய் தொற்று உள்ள பகுதியில் இருந்து தேர்வு எழுத வருவார்கள். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முக்கியமானது என்றால், தற்போதுள்ள சூழ்நிலையில் அவசரமாக நடத்தவேண்டிய அவசியம் இல்லை.
எனவே, கொரோனா வைரஸ் தொற்று முற்றிலும் இல்லாத சூழ்நிலை வரும் வரை பொதுத் தேர்வை தள்ளிவைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.