தமிழகத்தில் புதிதாக 60 குழந்தைகளுக்கு கொரோனா - சென்னையில் ஒரே நாளில் 8 பேர் பலி
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 60 குழந்தைகள் புதிதாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 8 பேர் உயிரிழந்தனர்.
சென்னை,
கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தபோதிலும் ஊரடங்கில் பல்வேறு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா வைரசின் பாதிப்பு இந்த மாதம் தொடங்கிய முதல் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. அதைப்போல் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகிறது. அந்த வகையில் தற்போது 3 லட்சம் பரிசோதனை கருவிகள் முடியும் நிலையில் உள்ளது. இதனால் அனைத்து அரசு மருத்துவமனைகளில், கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வதை நிறுத்திவிட்டு, சிறப்பு முகாம்களில் மட்டும் பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதிலும் அறிகுறிகள் அதிகமாக உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்றை அதிக பரிசோதனை மூலமே கண்டறிய முடியும். இந்த நிலையில் தற்போது பரிசோதனை கருவிகள் தட்டுப்பாடு ஏற்பட்டால் தொற்று உள்ளவர்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்படும். இதனால் கூடுதல் பரிசோதனை கருவிகள் உடனே கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று 21 மாவட்டங்களில் புதிதாக நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 716 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 718 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக மருத்துவமனையில் நேற்று நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக் கப்பட்ட 6 ஆயிரத்து 520 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை தமிழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து 2 ஆயிரத்து 134 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 83 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று, சென்னையில் 46 குழந்தை உட்பட 510 பேரும், அரியலூரில் 36 பேரும், செங்கல்பட்டில் 6 குழந்தைகள் உட்பட 35 பேரும், பெரம்பலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா 27 பேரும், காஞ்சீபுரத்தில் 24 பேரும், திருவண்ணாமலையில் 13 பேரும், ராணிப்பேட்டையில் 2 வயது ஆண் குழந்தை உட்பட 9 பேரும், தேனியில் 7 பேரும், விருதுநகர், கரூர், விமான நிலைய முகாமில் தலா 4 பேரும், நெல்லையில் 3 பேரும், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், வேலூர், விழுப்புரம், தென்காசி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 12 வயதுக்கு உட்பட்ட 60 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 261 ஆண்கள் மற்றும் 226 பெண்கள் என 487 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 13 முதல் 60 வயது வரை 5 ஆயிரத்து 216 ஆண்கள், 2 ஆயிரத்து 416 பெண்கள் மற்றும் மூன்று, 3-ம் பாலினத்தவர் என 7 ஆயிரத்து 635 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 371 ஆண்கள் மற்றும் 225 பெண்கள் என 596 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் நேற்று ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருவள்ளூரை சேர்ந்த 43 வயது பெண் மற்றும் சென்னையை சேர்ந்த 55 வயது பெண், 69 மற்றும் 63 வயது ஆண் உள்ளிட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததும், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 75, 70, 58 வயது ஆண்கள் உயிரிழந்ததும், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 57 வயது ஆண் ஒருவரும் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் இதுவரை 39 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 11 ஆயிரத்து 788 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2 லட்சத்து 66 ஆயிரத்து 687 மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதில் 2 லட்சத்து 56 ஆயிரத்து 720 மாதிரிகளில் கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. மேலும் 1,249 மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை. 11 ஆயிரத்து 103 மாதிரிகள் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.