வருமான வரித்துறை வழக்கு: கார்த்தி சிதம்பரத்தை விடுவிக்க ஐகோர்ட்டு மறுப்பு

வருமான வரித்துறை வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை விடுவிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

Update: 2020-05-12 21:15 GMT
சென்னை, 

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் சென்னை அடுத்துள்ள முட்டுக்காட்டில் தங்களுக்கு சொந்தமான சொத்தை கடந்த 2015-ம் ஆண்டு விற்பனை செய்தனர். இந்த நில விற்பனை மூலம் கிடைத்த வருமானத்தை குறைத்து, வருமான வரி கணக்கு தாக்கல் செய்ததாக இருவர் மீதும் குற்றம்சாட்டி சென்னை எழும்பூர் கோர்ட்டில் வருமான வரித்துறை கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.

கார்த்தி சிதம்பரம் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக்கோரி சிறப்பு கோர்ட்டில் இருவரும் தாக்கல் செய்த மனு கடந்த ஜனவரி மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, தங்களை விடுவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் இருவரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி எம்.சுந்தர் விசாரித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதியை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது என்றும் இவர்கள் மீதான வழக்கின் விசாரணையை சிறப்பு கோர்ட்டு மேற்கொள்ளலாம் என்றும் தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்