தமிழகத்தில் மேலும் 798 பேருக்கு கொரோனா தொற்று - மொத்த பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டியது

தமிழகத்தில் மேலும் 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;

Update: 2020-05-11 13:40 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தலைநகர் சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிக அளவு காணப்படுகிறது. சென்னை நகரில் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்த போதிலும், போதிய பலன் கிடைப்பது இல்லை. அதிகமான மக்கள் தொகை, குறுகலான தெருக்கள், சமூக விலகலை சரியாக கடைபிடிக்காதது போன்றவையே இதற்கு முக்கிய காரணங்களாக கூறப் படுகிறது.

இதனால் நகரில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சென்னையில்தான் உள்ளனர். சென்னையில் கடந்த 10 நாட்களாக கொரோனா வேகமாக பரவி வருகிறது. நகரில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா தொற்று நேற்று புதிய உச்சத்தை தொட்டது. நேற்று சென்னையில் மட்டும் 509 -பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தமிழகம் முழுவதும் நேற்று 669 -பேருக்கு கொரோனா  தொற்று ஏற்பட்டது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  7,204 - ஆக இருந்தது. 

மேலும் 798- பேருக்கு பாதிப்பு

இந்த நிலையில், தமிழகத்தில் இன்று மேலும் 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,002 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒருநாளில் மட்டும் 538-பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 4371-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 53 -ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று  92 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,051 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்