சென்னையில் ஊரடங்கு காலத்தில் 79 சதவீதம் குற்றங்கள் குறைந்தன - கொலை, தற்கொலைகளும் சரிந்து விட்டன
சென்னை நகரில் ஊரடங்கு காலகட்டத்தில் 79 சதவீதம் குற்றங்கள் குறைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கொலை, தற்கொலைகளும் சரிந்துவிட்டன.
சென்னை,
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்கள் வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். இதனால் சென்னையில் குற்றங்கள் வெகுவாக குறைந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக சென்னை நகர போலீசார் வெளியிட்ட குற்றங்கள் தொடர்பான புள்ளி விவரங்கள் வருமாறு:-
சென்னை நகரில் ஊரடங்கு தொடங்கிய, முதல் 15 நாட்களில் மட்டும் கணக்கிடப்பட்டு பார்த்ததில், ஒட்டு மொத்தமாக 79 சதவீதம் குற்றங்கள் குறைந்துள்ளன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட முதல் 15 நாட்கள், அதற்கு முந்தைய 15 நாட்களில் நடந்த குற்றங்கள் ஒப்பிட்டு பார்க்கப்பட்டுள்ளன. ஊரடங்கு காலகட்டத்தில் 44 சதவீதம் கொலை வழக்குகள் குறைந்துள்ளன.
கொள்ளை வழக்குகள் 75 சதவீதமும், வீடு புகுந்து திருடும் வழக்குகள் 59 சதவீதமும் குறைந்துள்ளன. காய வழக்குகள் 82 சதவீதம் குறைந்துள்ளன. சாலைகளில் நடந்த விபத்து சாவு வழக்குகளும் 81 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. தற்கொலை சம்பவங்களும் குறைந்து விட்டன.
கொலை வழக்குகள்
ஊரடங்குக்கு முந்தைய 15 நாட்களுக்கான காலகட்டத்தில் 9 கொலை வழக்குகளும், ஊரடங்கு காலத்தில் 5 கொலை வழக்குகளும் பதிவாகி உள்ளன. அதேபோல் ஊரடங்கு பிறப்பித்த பின் 1 வழிப்பறி மற்றும் 4 கொள்ளை வழக்குகள் அரங்கேறி உள்ளன. ஊரடங்கு பிறப்பிப்பதற்கு முன்பு 1 வழிப்பறி மற்றும் 16 கொள்ளை வழக்குகளும், 29 வீடு புகுந்து திருடிய வழக்குகளும் பதிவாகி உள்ளன.
ஊரடங்கு காலகட்டத்தில் 56 காய வழக்குகள் போடப்பட்டு உள்ளன. ஊரடங்கு அமலாகும் முன்பு 297 காய வழக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.