சென்னையில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஆயிரம் தெருக்களில் லாரி தண்ணீர் வினியோகம் நிறுத்தம் - குழாய்கள் மூலம் கூடுதல் குடிநீர் வழங்க அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு

சென்னையில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஆயிரம் தெருக்களில் லாரி தண்ணீர் வினியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் அங்கு குழாய்கள் மூலம் கூடுதலாக குடிநீர் வழங்க அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-05-06 22:00 GMT
சென்னை, 

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் பெருநகர சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணி குறித்தும், கிருமி நாசினிகள் மற்றும் கிருமி நாசினி தெளிக்க பயன்படுத்தப்படும் எந்திரங்கள், கையுறைகள், முககவசங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டறிந்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

சென்னை மாநகராட்சியில் தற்போது நாள் ஒன்றுக்கு 650 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்-அமைச்சரின் முயற்சியின் காரணமாக இந்த ஆண்டு ஆந்திர அரசிடம் இருந்து 7.6 டி.எம்.சி அளவு கிருஷ்ணா நதி நீர் பெறப்பட்டது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 6.3 டி.எம்.சி அளவு தண்ணீர் கையிருப்பு உள்ளது. இது இந்த ஆண்டு குடிநீர் வழங்க போதுமானதாகும்.

தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, சென்னையில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும்போது கூட்ட நெரிசலை தவிர்க்க, ஏற்கனவே லாரிகள் மூலம் குடிநீர் வழங்கி வந்த ஆயிரம் தெருக்களில் தண்ணீர் வினியோகம் நிறுத்தப்பட்டு, குழாய்கள் மூலம் குடிநீர் வழங்க 50 மில்லியன் லிட்டர் கூடுதலாக அதிகரித்து, தினமும் 700 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. பொதுமக்களிடையே முககவசம், கையுறைகள் அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தனிமைப்படுத்தும் மையங்களில் குடிநீர், கழிப்பறை வசதி மற்றும் இதர பாதுகாப்புகள் குறித்து ஆய்வு செய்து உறுதி செய்த பின்னரே அங்கு தனிமைப்படுத்தும் நபர்கள் தங்க வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் ஊரக உள்ளாட்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

சென்னை மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் இன்று (வியாழக்கிழமை) முதல் 700 மில்லியன் லிட்டராக உயர்த்தி வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு இறுதி வரை எவ்வித தடையும் இன்றி மாநகருக்கு தொடர்ந்து நாளொன்றுக்கு 700 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க முடியும் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்