சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்படாது - தமிழக அரசு அறிவிப்பு
சென்னையில் டாஸ்மாக் மதுக்கடைகள் நாளை (வியாழக்கிழமை) திறக்கப்படாது என்றும், திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் மார்ச் 24-ந் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து கடைகளையும் திறக்க தடை விதிக்கப்பட்டது. டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்பட்டன. அவற்றோடு மதுபானக் கூடங்களான பார்களும் மூடப்பட்டன. எனவே தமிழகத்தில் தற்காலிகமாக மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது போன்ற நிலை ஏற்பட்டு இருந்தது.
மதுப்பிரியர்கள், மதுவுக்கு அடிமையானவர்களுக்கு இது அதிருப்தியைத் தந்தது. எனவே அவர்களுக்காக, கள்ளச் சாராயம் காய்ச்சுவது, வீட்டில் மது தயாரிப்பது போன்ற குற்றங்கள், பக்க விளைவாக ஆங்காங்கு தென்படத் தொடங்கின. ஆனாலும் போலீசாரின் கடுமையான நடவடிக்கைகளால் அந்த குற்றங்கள் உடனே தடுக்கப்பட்டன.
இது ஒரு பக்கம் இருந்தாலும், மது இல்லாத தமிழகம், பெரும்பாலான மக்களின் வரவேற்பைப் பெற்றது. மது போதையினால் நடக்கும் குற்றங்களும் பெருமளவில் குறைந்திருந்தன.
இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்திய பக்கத்து மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா ஆகியவை மதுக்கடைகளை திறக்க அனுமதித்தன. இதனால் தமிழகத்தை ஒட்டியுள்ள அந்த மாநில எல்லைப் பகுதியில் சலசலப்புகள் ஏற்பட்டன.
அந்த மாநிலங்களின் எல்லைப் பகுதியில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த பலர், அங்குள்ள மதுக்கடைகளை நாடிச் செல்லத் தொடங்கினர். எனவே மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தமிழகத்திலும் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க அரசு முடிவு செய்தது.
அதன்படி, தமிழகத்தில் நோய்க் கட்டுப்பாட்டு பகுதியைத் தவிர மற்ற இடங்களில் உள்ள மதுக்கடைகள் 7-ந் தேதி முதல் (நாளை முதல்) திறக்கப்படும் என்று அரசு உத்தரவிட்டது. பல்வேறு நிபந்தனைகளுடன் விதிக்கப்பட்டுள்ளன.
டாஸ்மாக் மதுக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை திறந்திருக்கும் என்றும் பார்கள் திறக்கப்படாது என்றும் அரசு அறிவித்துள்ளது. எனவே மது பாட்டில்களை வாங்கி வீட்டுக்குக் கொண்டு வந்து குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில் சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளை திறந்தால், மக்கள் அதிக அளவில் அங்கு கூடிவிடுவார்கள், இது கொரோனாவுக்கு கொண்டாட்டம் ஆகிவிடும் என்று உணர்ந்த அரசு, நேற்று திடீரென்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
அதில், “சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் 7-ந் தேதி (நாளை) திறக்கப்படமாட்டாது. இந்தக் கடைகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.
650 கடைகள்
தமிழகத்தில் மொத்தம் 5,300 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. டாஸ்மாக் நிறுவனத்தின் சென்னை மண்டலத்தில் மட்டும் சென்னை வடக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, காஞ்சீபுரம் வடக்கு, காஞ்சீபுரம் தெற்கு ஆகிய 7 மாவட்டங்கள் அடங்கியுள்ளன. இந்த மண்டலத்துக்கு உட்பட்டு 910 கடைகள் இயங்குகின்றன.
அவற்றில் சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 650 டாஸ்மாக் கடைகள் தற்போது திறக்கப்படமாட்டாது என்று அரசு அறிவித்துள்ளது. அதனால் அரசுக்கு 18 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.