சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் - அமைச்சர் பி.தங்கமணி உத்தரவு
தமிழகத்தில் சிறு, குறு தொழிற்சாலைகள் இயங்க தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்ய வேண்டும் என்று அமைச்சர் பி.தங்கமணி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்தபடி அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுடன் மின்சாரம் பகிர்மானம் மற்றும் உற்பத்தி குறித்து காணொலி காட்சி மூலம் நேற்று ஆய்வு செய்தார்.
குறிப்பாக கோடைகாலம் தொடங்கிய நிலையில் மின்சாரம் கட்டமைப்பு மேலாண்மை, மின்சாரம் தடங்கல், மின்சாரம் தேவை அதிகரிப்பு மற்றும் மின் உபகரணங்கள் பராமரிப்பு பற்றி அமைச்சர் கேட்டறிந்தார்.
ஊரடங்கு தளர்வை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) முதல் சிறு, குறு தொழிற்சாலைகள் இயங்க அரசு அனுமதித்துள்ளது. இதனால் மின்சாரத்தின் தேவை அதிகரிக்கும். அதனடிப்படையில் மின்சார உற்பத்தியை அதிகரிப்பதற்கு தயார் நிலையில் அதிகாரிகள் இருக்க வேண்டும்.
அத்துடன் தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்யப்பட வேண்டும். அதேபோல், மின்தடங்கல்கள் ஏற்படும் இடங்களில் விரைவாக சென்று மின்சாரம் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் அரசு அறிவுறுத்தும் நடைமுறைகளை பின்பற்றி பணியாற்ற வேண்டும்.
குறிப்பாக தொற்று நோய் உள்ள பகுதிகளுக்கு பணிக்கு செல்லும் ஊழியர்களுக்கு முககவசம், கையுறை மற்றும் கிருமி நாசினி வழங்க வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டார்.
ஆய்வு கூட்டத்தில் மின்சார வாரியத் தலைவர் விக்ரம் கபூர், மேலாண்மை இயக்குநர், அனைத்து இயக்குநர்கள், அனைத்து தலைமை பொறியா ளர்கள் கலந்து கொண்டனர்.