கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கை கடுமையான கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்த வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கை கடுமையான கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2020-05-05 21:00 GMT
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு தீவிரம் அடைந்திருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. சென்னையில் இப்போது அதிகரித்துள்ள நோய்த்தொற்றுகள் அனைத்துமே ஊரடங்கு காலத்தில் நிகழ்ந்தவை தான். 

அப்போதே சென்னை போன்ற நகரங்களில் நோய்ப்பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலையில், இப்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், நோய்ப்பரவலை தடுப்பது என்பது யாராலும் சாத்தியமற்ற ஒன்றாகும். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விஷயத்தில் கடந்த 40 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் கிடைத்த பயன்களில் பெரும்பகுதி கடந்த சில நாட்களாக நிகழ்ந்த குழப்பங்களில் வீணாகி விட்டன.

எனவே சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களிலும், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் மாவட்டங்களிலும் நிலைமை கட்டுக்குள் வரும் வரை முழுஊரடங்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். 

அந்த காலத்தில் மருந்து கடைகள், மளிகை மற்றும் காய்கறி கடைகள் தவிர வேறு எந்த கடைகளையும் திறக்க அரசு அனுமதிக்க கூடாது. ராணுவ ஊரடங்கு எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுமோ, அதேபோன்ற கடுமையான ஊரடங்கை நடைமுறைப்படுத்தி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்