இதுவரை இல்லாத அளவு: தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு - மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 550 ஆக உயர்வு
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 527 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 550 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை,
இந்தியாவில் தொடர்ந்து நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் நேற்று ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 527 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 550 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் வழக்கம்போல் தலைநகரான சென்னையில் புதிய உச்சமாக 266 பேரும், புதிதாக கடலூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 122 பேரும் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்து 62 ஆயிரத்து 970 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதில் 1 லட்சத்து 58 ஆயிரத்து 558 மாதிரிகளில் கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. மேலும் 862 மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை. 9 ஆயிரத்து 481 மாதிரிகள் 2-ம் முறை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 12 ஆயிரத்து 863 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதில் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 527 கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்பு உடையவர்கள் ஆவர். தமிழகத்தில் நேற்று பாதித்த 527 பேரில், 377 ஆண்கள், 150 பெண்கள் ஆவர். தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்து 550 பேரில், 2 ஆயிரத்து 392 ஆண்களும், 1,157 பெண்களும், ஒரு 3-ம் பாலினத்தவரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 65 வயது ஆண், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் தமிழகத்தில் பலியானோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. சென்னை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களில் இதுவரை 1,409 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று ஒரே நாளில் 30 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்.
கடலூரில் 122 பேர்
தமிழகத்தில் நேற்று பாதிக்கப்பட்டவர்களில், சென்னையில் 3 நாள் ஆண் குழந்தை உள்பட 19 குழந்தைகள் மற்றும் 247 பேரும், கடலூரில் 2 குழந்தைகள் உள்பட 122 பேரும், விழுப்புரத்தில் 49 பேரும், பெரம்பலூரில் 25 பேரும், திருவண்ணாமலையில் 11 பேரும், திண்டுக்கலில் 10 பேரும், தென்காசி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தலா 9 பேரும், அரியலூரில் 6 பேரும், திருச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா 4 பேரும், ராணிப்பேட்டையில் 3 பேரும், திருவாரூர் மற்றும் விருதுநகரில் தலா 2 பேரும், கரூர், மதுரை, ராம நாதபுரம், தஞ்சாவூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று பாதித்தவர்களில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில், சென்னையில் 19 குழந்தைகளும், கடலூரில் 2 குழந்தைகளும், திருவாரூரில் 1 குழந்தையும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகள் பயணம் மேற்கொள்ளாமல் 36 பேர் முதன்மை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.