போலீஸ் துணை கமிஷனருக்கு கொரோனா தொற்று - இன்னொரு துணை கமிஷனர் தனிமைப்படுத்தப்பட்டார்
சென்னையில் அண்ணாநகர் துணை போலீஸ் கமிஷனருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கார் டிரைவர் பாதிக்கப்பட்டதால் இன்னொரு துணை கமிஷனர் அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.
சென்னை,
சென்னையை கோடை வெயிலை விட, கொரோனா வாட்டி வதைக்கிறது. சென்னை போலீசாருக்கும் சோதனை மேல் சோதனை ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 23 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் குடும்பத்தினருடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இந்த நிலையில் நேற்று உயர் போலீஸ் அதிகாரிகளையும் கொரோனா மிரட்ட ஆரம்பித்துள்ளது. திருமங்கலம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரின் காரை ஓட்டும் போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அந்த இன்ஸ்பெக்டர் அவரது வீட்டில் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளார்.
கோயம்பேடு மார்க்கெட் கொரோனா பாதிப்பின் மிகப்பெரிய மையமாக மாறிவிட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்கள் கொரோனாவால் தாக்கப்பட்டனர். இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பாதுகாப்பு பணியை மேற்பார்வையிட்ட அண்ணாநகர் துணை போலீஸ் கமிஷனர் நேற்று கொரோனா பாதிப்பில் சிக்கினார். அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க் கப்பட்டார். அவரது குடும்பத்தினரும் சோதனை வளையத்தில் வைக்கப்பட்டனர். அவர் குணமாகி வரும் வரை வேறு அதிகாரி அண்ணாநகர் துணை கமிஷனர் பொறுப்பில் நியமிக்கப்பட உள்ளார்.
சென்னை தலைமையக துணை கமிஷனரின் கார் டிரைவராக பணியாற்றும் போலீஸ் காரருக்கும் நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு சென்றார். இதனால் அந்த துணை கமிஷனரும் அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினருக்கும் சோதனை நடத்தப்பட்டது. சென்னை போலீசில் கொரோனா பாதிக் கப்பட்டவர்கள் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
புளியந்தோப்பு துணை கமிஷனர்
புளியந்தோப்பு துணை கமிஷனர் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். அவருக்கு பதில், புளியந்தோப்பு துணை கமிஷனர் பொறுப்பை ஐகோர்ட்டு துணை கமிஷனர் சுந்தரவடிவேல் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.