தமிழகத்தில் ஊரடங்கு ஓரளவு தளர்வு - பல பகுதியில் கடைகளை மும்முரமாக திறந்த வியாபாரிகள்!

தமிழகத்தில், கொரோனா பாதிப்பு இல்லாத பகுதியில் ஓரளவுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால்,40 நாட்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டன.

Update: 2020-05-04 11:32 GMT
சென்னை,

உயிர் கொல்லி வைரஸ் கிருமியான கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் போராடிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த 3-வது கட்டமாக ஊரடங்கு வருகிற 17-ந் தேதி இரவு வரை தொடர இருக்கும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு ஓரளவு தளர்த்தியுள்ளது. இந்த தளர்வுகள் அனைத்தும் 40 நாட்களுக்கு பிறகு இன்று முதல் நடைமுறைக்கு வர வந்தன.

தமிழகத்தில் கொரோனா நோய் தாக்குதல் அதிகம் உள்ள பகுதிகள் சிவப்பு மண்டலம் என்றும், நோய் தொற்று குறைவான பகுதிகள் ஆரஞ்சு மண்டலம் என்றும், நோய் தொற்று அறவே இல்லாத பகுதிகள் பச்சை மண்டலம் என்றும் 3 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளதால் சென்னை மாநகரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர, பிற இடங்களில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. செல்போன் ரீசார்ஜ், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை அங்காடி, வாகனங்கள் பழுது பார்க்கும் கடைகள் திறக்கப்பட்டன.

சென்னை திநகர் உள்ளிட்ட சில பகுதிகளில் மொபைல் மற்றும் எலெக்ட்ரானிக் கடைகள் திறக்கப்பட்டன. மக்கள் குவிந்ததை தொடர்ந்து நெருக்கடி அதிகமாக இருக்கும் பகுதியாக இருப்பதால் அந்த கடைகளை மூட போலீசார் உத்தரவிட்டனர்.

காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து தடை உத்தரவு விதித்திருப்பதால் அங்கு 90 சதவீதக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

ஊரடங்கு கட்டுப்பாட்டை தமிழக அரசு ஓரளவு தளர்த்தியுள்ள நிலையில், கோவை டவுன்ஹால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திரண்ட பொதுமக்கள், சமூக விலகலை கடைபிடித்து, பொருட்கள் வாங்கிச் சென்றனர். அதேபோல், 40 நாட்களுக்கு பிறகு கோவை மாநகரில் போக்குவரத்து சிக்னல்கள் நடைமுறைக்கு வந்தது.

ராமநாதபுரத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவதால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகளைத் தவிர பிற கடைகள் இங்கு பெரிய அளவில் திறக்கப்படவில்லை.

சேலம் மாநகரில் உள்ள கடைவீதிகளில் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. கடைகள் திறக்கும் நேரக் கட்டுப்பாடுகளை, மாநகராட்சி நிர்வாகம் தெளிவுப்படுத்த வேண்டும் என வியாபாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். அதேபோல், சேலம் சாலைகளில் வாகனங்கள் இயக்கம் அதிகரித்துள்ளது. 

நெல்லை மாநகரில் சிறு வணிக நிறுவனங்கள், செல்போன் சேவை மையம் உள்ளிட்ட  கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகள் தொடர்பான ஆட்சியரின் வழிமுறைகள் கிடைக்காததால், சில இடங்களில் வியாபாரிகள் கடைகளை திறக்க முடியாமல் குழப்பம் அடைந்துள்ளனர். 

மேலும் செய்திகள்