கொரோனா எதிரொலி; விழுப்புரத்தில் 11 கிராமங்களை தனிமைப்படுத்த உத்தரவு

சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து சென்றவர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் விழுப்புரத்தில் 11 கிராமங்களை தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

Update: 2020-05-03 05:55 GMT
சென்னை,

ஊரடங்கு 2வது முறையாக நீட்டிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இவற்றில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன.  சென்னையில் அதிக அளவு பாதிப்பு உள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து கடலூர் சென்ற 7 பேருக்கு கொரோனா பாதிப்பு நேற்று உறுதியானது.  இதேபோன்று சென்னை கோயம்பேட்டில் இருந்து அரியலூருக்கு சரக்கு வாகனங்கள் மூலம் சென்ற தொழிலாளர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 2 சிறுவர்கள் உள்பட 20 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது முடிவானது.

இதனை முன்னிட்டு கடலூர் மற்றும் அரியலூரில் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளது.  கோயம்பேட்டில் இருந்து காஞ்சிபுரம் வந்த தொழிலாளர்களில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோயம்போடு மூலம் பெரம்பலூரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து விழுப்புரம் சென்றவர்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.  இதனால், விழுப்புரத்தில் 11 கிராமங்களை தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.  நேற்று முன்தினம் ஒருவர் மற்றும் நேற்று 2 பேருக்கு என விழுப்புரத்தில் 20 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து சென்றவர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் விழுப்புரத்தில் ஆவுடையார்பட்டு, பஞ்சமாதேவி, கண்டமானடி, திருப்பாச்சனூர், ராம்பாக்கம், கயத்தாறு, குத்தாம்பூண்டி, தும்பூர், பூண்டி, கஸ்பா காரணை, அசோகபுரி ஆகிய 11 கிராமங்களை தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.  கோயம்பேடு சந்தையில் இருந்து வருபவர்களை கண்டறியும் பணி தீவிரம் அடைந்துள்ளது.  தீவிரமாக கண்காணிக்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்