முறைகேடு புகார் எதிரொலி: ‘டான்பிநெட்’ டெண்டரை இறுதி செய்யக்கூடாது - தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவு

கிராமங்களுக்கு பைபர் இணைப்பு வசதியை ஏற்படுத்தும் ‘டான்பிநெட்’ டெண்டர் நடவடிக்கைகளை இறுதி செய்யக் கூடாது என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-05-02 22:30 GMT
சென்னை, 

அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் சமீபத்தில் மத்திய அரசுக்கு புகார் மனு ஒன்றை அனுப்பி இருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தின் கிராமங்களை பைபர் மூலம் இணைக்கும் பாரத்நெட் திட்டத்தை அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என்று தகவல் தொழில் நுட்ப அமைச்சர் கூறியிருந்தார். அதற்கான பைபர் ஆப்டிக் பதிப்புக்கான ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள டெண்டர் நடவடிக்கைகள், கடந்த ஜனவரி மாதத்தில் முடிந்திருக்க வேண்டும்.

ஆனால் சில கம்பெனிகளுக்கு மட்டும் சாதகமாக இருக்கும் வகையில் அதில் பெரிய மாற்றங்கள் எதையும் செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முன்வரவில்லை. இதனால் 2 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் டெண்டருக்கான இறுதித் தேதி எந்தக் காரணமும் இல்லாமல் மே மாதம் வரை நீடிக்கப்பட்டது. டெண்டரில் பங்கு பெறுவதற்கான கம்பெனிகளின் ஆண்டு விற்று முதல் பல மடங்கு உயர்த்தப்பட்டது. இந்தத்திட்டத்துக்கு தேவைப்படும் ஒரு உபகரணத்தின் குறியீடும் மாற்றப்பட்டுள்ளது.

டெண்டர் நடவடிக்கைகளில் பெரிய மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால், 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கொண்ட தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதலை பெற்றிருக்க வேண்டும். அதைப் பெறவில்லை.எனவே உள்நோக்கத்தோடு அசல் டெண்டரில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் சட்டவிரோதமான அந்த மாற்றப்பட்ட டெண்டரை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதற்கு துணைபோன அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழக தலைமைச் செயலாளர், தமிழ்நாடு பைபர்நெட் கழக (டான்பிநெட்) மேலாண்மை இயக்குனர் ஆகியோருக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அறப்போர் இயக்கத்தில் இருந்து மத்திய அரசுக்கு புகார் மனு வரப்பெற்றது. அதில், பொது கொள்முதல் விதிகளை பின்பற்றாமல் ‘டான்பிநெட்’ நிறுவனம் செயல்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதில் தவறிழைத்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது பற்றி பரிசீலிக்க வேண்டும். இந்த புகார் மனுவை ஆய்வு செய்து, அதில் முறைகேடு இருந்தால் அதை திருத்திக்கொள்ள வேண்டும்.

மேலும், நிலைக்குழு கூட்டத்தில் இதுதொடர்பான தீர்மானம் கொண்டு வருவதற்கு வசதியாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு இதுதொடர்பான அறிக்கையை விரைவாக அனுப்ப வேண்டும்.

புகாரில் கூறப்பட்டுள்ள குறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரி நிவர்த்தி செய்யும்வரை அதில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்முதலை இறுதி செய்யக் கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்