நீதிபதிகளின் பணிமாற்றம் நிறுத்தி வைப்பு: அவசர வழக்குகள் காணொலி காட்சி மூலம் விசாரிக்கப்படும் - ஐகோர்ட்டு முடிவு

நீதிபதிகளின் பணிமாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அவசர வழக்குகள் காணொலி காட்சி மூலம் விசாரிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு முடிவு செய்துள்ளது.

Update: 2020-05-02 22:00 GMT
சென்னை, 

ஊரடங்கை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நீதிமன்றங்களின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அவசர வழக்குகள் மட்டும் காணொலி காட்சி மூலம் விசாரிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் ஐகோர்ட்டுக்கு விடப்படும் கோடை விடுமுறை தள்ளிவைக்கப்பட்டது. மே மாதம் அனைத்து நீதிமன்றங்களும் செயல்பட ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு முடிவு செய்தது.இந்தநிலையில், மே மாதம் ஐகோர்ட்டு உள்பட இருமாநிலங்களிலும் உள்ள அனைத்து நீதிமன்றங்கள் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து முடிவு செய்ய ஐகோர்ட்டு அனைத்து நீதிபதிகளிடம் காணொலி காட்சி மூலம் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி கருத்து கேட்டார்.

இதையடுத்து, மே மாதம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் பணிகள் காணொலி காட்சி மூலமாக நடைபெறவேண்டும். சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளையில் கூடுதல் அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வழக்குகளை விசாரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், இந்த வழக்குகளை நீதிபதிகள் தங்களது வீடுகளில் இருந்தவண்ணம் விசாரணை மேற்கொள்வர் என்றும், இ பைலிங் முறை மூலமாக அவசர, அவசியம் எனக் கருதும் மனுக்களை மட்டும் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், ஐகோர்ட்டு மதுரை கிளையில் நீதிபதிகள் தங்களது வீடு அல்லது நீதிமன்ற அறைகளில் இருந்து விசாரிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகளின் வருடாந்திர பணியிட மாற்றத்தை இந்தாண்டு நிறுத்தி வைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்